பிப்ரவரி 5 ஆம் தேதி தில்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. இதற்காக, மாநிலம் முழுவதும் 13,766 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. 699 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று முடிந்தது.
இந்தத் தேர்தலில் தொடர்ந்து 3 ஆவது முறையாக வெற்றிபெற்று ஆட்சியைத் தக்க வைக்க ஆம் ஆத்மி தீவிர பரப்புரையில் ஈடுபட்டது.மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற பாஜக, காங்கிரசு இடையே கடுமையான போட்டி இருந்தது.
தேர்தலில் மொத்தம் 60.54 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.
வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் பாஜக போட்டியிட்ட 68 தொகுதிகளில் 48 இடங்களில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் கட்சிகள் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவின. இறுதிவரை கடுமையான போட்டியை கொடுத்த ஆம் ஆத்மி 22 இடங்களில் வெற்றிபெற்றது.
டெல்லியை பொறுத்தவரை பாஜக கடைசியாக 1993 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வென்றது.பின்னர், 1998 இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரசிடம் தோல்வியைத் தழுவியது. அதன்பிறகு காங்கிரசு, ஆம் ஆத்மி கட்சிகளிடம் தோல்வியை மட்டுமே பாஜக பெற்று வந்தது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி அரியணையை பாஜக கைப்பற்றி உள்ளது.
இந்தத் தேர்தலில் பா.ஜ.க வாக்குகள் 2020 தேர்தலை விட 7 விழுக்காடு அதிகரித்துள்ளது. 2015 இல் 32.3 விழுக்காடு, 2020 இல் 38.51 விழுக்காடு ஓட்டு வாங்கிய பா.ஜ.க, இந்தத் தேர்தலில் 45.56 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஆம்ஆத்மி கட்சி 2015 இல் 54.5 விழுக்காடு, 2020 இல் 53.57 விழுக்காடு பெற்றது. இந்த முறை 10 விழுக்காடு வாக்குகள் குறைந்து 43.57 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது.
இதனால் 2015 இல் 67 இடங்களையும், 2020 இல் 62 இடங்களையும் பெற்ற ஆம்ஆத்மி, இம்முறை 22 இடங்களை மட்டுமே பிடித்தது.
1998 முதல் 2013 வரை 15 ஆண்டுகளாக டெல்லியில் ஆட்சியில் இருந்த காங்கிரசு தொடர்ந்து மூன்றாம் முறையாக எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. ஆனால் அதன் வாக்கு விழுக்காடு 2.1 விழுக்காடு அதிகரித்துள்ளது.அக்கட்சி, இந்தத் தேர்தலில் 6.34 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது. 2020 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக் கட்சிக்கு 4.3 விழுக்காடு வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
காங்கிரசுக் கட்சியும் ஆம் ஆத்மி கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டிருந்தால் பாஜக வெற்றி பெற்றிருக்காது என்று தெரிகிறது.இக்கருத்தைப் பல அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர்.