ஈரோடு கிழக்கு – இரு தரப்பும் கொண்டாடும் முடிவு

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் 2024 டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என சனவரி மாதம் 7 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

இதில், திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 46 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

பிப்ரவரி 5 ஆம் தேதி 237 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 1 இலட்சத்து 54 ஆயிரத்து 657 பேர் வாக்களித்தனர். இது 67.97 விழுக்காடு ஆகும்.

ஈரோடு இடைத்தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் பணி ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில் நேற்று காலை 8 மணிக்குத் துவங்கியது

எண்ணிக்கை முடிவில், திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 91,558 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 1,15,709 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி 24,151 வாக்குகள் பெற்றார். நோட்டாவுக்கு 6,109 வாக்குகள் பதிவாகின.

இந்த முடிவை வெற்றி பெற்ற திமுக கொண்டாடி வருகிறது.அதற்குக் காரணம், இந்தத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 75 விழுக்காடு வாக்குகள் பெற்று திமுக வெற்றி பெற்றிருக்கிறது.

2023 இல் நடந்த தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன். 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.இப்போது,ஈவிகேஎஸ் இளங்கோவன் பெற்ற வாக்கு வித்தியாசத்தைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அதாவது 91,558 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றி பெற்றுள்ளார்.

மொத்தம் பதிவான வாக்குகளில் ஒரு வேட்பாளர் 6 இல் ஒரு பங்கு வாக்குகளை பெற்றால் மட்டுமே கட்டுத் தொகையைத் திரும்பப் பெற முடியும். அந்த வகையில் நாதக வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட அவரை எதிர்த்துப் போட்டியிட்ட 45 பேரும் 6 இல் ஒரு பங்கு வாக்குகளைப் பெறாததால் கட்டுத்தொகை இழந்தனர்.

திமுக தலைவர் உட்பட யாரும் பரப்புரைக்கு வராமல் அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் மட்டும் பரப்புரை செய்தும் இவ்வளவு பெரிய வெற்றியை வாக்காளர்கள் கொடுத்துள்ளனர்.

இந்தக் காரணங்களைச் சொல்லி இவ்வெற்றியை திமுக கொண்டாடி வருகிறது.

அதேபோல் இரண்டாமிடம் பெற்ற நாம் தமிழர் கட்சியினரும் உற்சாகமாகவே இருக்கின்றனர்.அதற்குக் காரணம்,2023 சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு 10,827 வாக்குகள் கிடைத்தன.அது 6.35 விழுக்காடு.
2024 பாராளுமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியில் அக்கட்சிக்கு 12802 வாக்குகள் கிடைத்தன.அது 8.2 விழுக்காடு.

இப்போது அக்கட்சிக்கு 24,151 வாக்குகள் கிடைத்துள்ளன.இது 15.59 விழுக்காடு ஆகும்.

இதனால் கடந்த தேர்தலை விட இருமடங்கு வாக்குகளைப் பெற்றுவிட்டோம் பணமே கொடுக்காமல் இவ்வளவு வாக்குகள் எங்களுக்குக் கிடைத்தது பெரிய வெற்றி என்று சொல்கின்றனர்.

Leave a Response