
சென்னை செங்குன்றம் அடுத்த அலமாதி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் (25),தானி ஓட்டுநர்.இவர் திருமணமாகி மனைவி மற்றும் இரண்டுவயது குழந்தையுடன் வசித்து வருகிறார்.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி ஏப்ரல் 20 ஆம் தேதி மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் பரப்புரை மேற்கொள்ள தவெக தலைவர் விஜய், செங்குன்றம் அம்பேத்கர்நகர் மேம்பாலம் மீது வாகனத்தில் சென்றார்.அப்போது அங்கிருந்த பிரான்சிஸ் மீது விஜய்யின் பாதுகாவலர்கள் சென்ற மகிழுந்து வேகமாக மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.அப்போது,விஜய்யின் பரப்புரை வாகனம் பிரான்சிஸ் கால்மீது வேகமாக ஏறி இறங்கியது.இதில்,கால்முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்த பிரான்சிஸ்சை பொதுமக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.பின்னர்,மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து,சோழவரம் காவல்நிலையத்தில் ஏப்ரல் 21 ஆம் தேதி புகார் அளித்தார்.அப்போது,தேர்தல் நேரம் என்பதால் இரண்டு நாட்கள் கழித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்வதாக காவல்துறையினர் தெரிவித்தனராம்.ஆனால்,தற்போதுவரை விசாரணை மேற்கொள்ளாமலும் வழக்குப் பதிவு செய்யாமலும் இருப்பது குறித்து பிரான்சிஸ் தந்தை காவல்நிலையம் சென்று கேட்டாராம்.
தேர்தலில் ஜோசப் விஜய் வெற்றி பெற்று முதல்வராகிவிட்டார்.அதனால் அவர்மீது வழக்குப் பதிவு செய்யமுடியாது என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக, ஸ்டான்லி மருத்துவமனையில் செய்தியாளரிடம் பேசிய பிரான்சிஸ்,
நான் விஜய் இரசிகர் என்பதால் தேர்தல் பிரசாரத்திற்காக சென்றேன்.விஜய்யை பார்க்கப் போனபோது அவரது வாகனத்தில் சிக்கி படுகாயம் அடைந்து கால்முறிவு ஏற்பட்டது.இதைப் பார்த்த விஜய் எதுவுமே சொல்லவில்லை. இதுகுறித்து புகார் அளித்தும் இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.
பாதிக்கப்பட்ட பிரான்சிஸ்சின் தந்தை பேசுகையில்,
15 முறை காவல்நிலையத்திற்குச் சென்றுவிட்டேன்.ஆனால்,இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.எனது மகனுக்கு இதுவரை இரண்டு லட்சம் ரூபாய்வரை மருத்துவச் செலவு செய்துள்ளோம்.தவெக கட்சியில் 50 ஆயிரம் ரூபாய் தருகிறோம்.வழக்கு எதுவும் போடவேண்டாம் என்று சொல்கின்றனர்.ரூ.30 ஆயிரம் தருகிறோம் என்று போலீசார் கூறுகின்றனர்.விஜய் வந்தால் நல்லது நடக்கும் என்று நினைத்தோம்.ஆனால் நடக்கவில்லை.இதனால் தங்களுக்கு மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது.தலைமைச் செயலகம் முன்பு நானும்,எனது மகனும் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்கிறோம் என வேதனையுடன் கூறினார்.
பாதிக்கப்பட்டவரின் வழக்கறிஞர் பேசுகையில்,
காவல்நிலையத்தில் புகார் அளித்தபோது தேர்தல் நடைபெற உள்ளதால் 2 நாட்கள் கழித்து விசாரிக்கிறோம் என்று கூறிய நிலையில் தேர்தலில் விஜய் வெற்றி பெற்றவுடன் முதல்வர் மற்றும் அவரது வாகனம் மீது வழக்குப் பதிவு செய்யமுடியாது சமாதானமாகப் போகவேண்டும் என்று போலீசார் கூறுகின்றனர்.பாதிக்கப்பட்ட நபரின் தந்தையை அழைத்து ரூ.50 ஆயிரம் தருகிறோம்,முதல்வரின் வாகனம் மீது வழக்குப்பதிவு செய்யமுடியாது என்று போலீசார் மிரட்டுகின்றனர்.வழக்குப்பதிவு செய்தால் வாகனத்தின் காப்பீட்டில் இருந்து பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கப்படும்.
ஏழைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.எனவே விஜய் வாகனத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்வதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போகிறோம். இதனால்,காவல்துறை மற்றும் தவெக கட்சியினர் எங்களை மிரட்டுகின்றனர்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதனால்,அப்பகுதி தவெகவினரிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


