செய்தியாளர்களைச் சரமாரியாகத் தாக்கிய தவெக சமஉ – சோளிங்கர் பரபரப்பு

இராணிப்பேட்டை மாவட்டம்,சோளிங்கரில் உள்ள ஒரு திரையரங்கில் ஜனநாயகன் திரைப்படத்தை சோளிங்கர் தவெக சமஉ கபில் பார்த்துவிட்டு வெளியே வந்துள்ளார்.அப்போது,யூ டியூபர் சிவா என்பவர் தவெக கட்சியினரிடம் படத்தின் விமர்சனம் கேட்டுக்கொண்டிருந்தாராம்.அதைப்பார்த்த தவெக சமஉ கபில்,அந்த யூ டியூபரை தாக்க முயன்றுள்ளார்.அதுதொடர்பான காணொலி சமூகவலைதளங்களில் பரவியது.மேலும் இதுகுறித்த செய்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.

இதனால்,சமஉ கபில் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்து அந்த யூ டியூபர் சிவாவை தேடிச் சென்றுள்ளனர்.படத்தை திரையிட்ட திரையரங்குக்குச் சென்று சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு 8.30 மணியளவில் சோளிங்கர் அண்ணாசிலை அருகே உள்ள யூ டியூபரின் வீட்டிற்கு சமஉ கபில் மற்றும் அவரது தம்பி தனஞ்செழியன் மற்றும் 10க்கும் மேற்பட்டவர்கள் சென்றுள்ளனர்.அங்கிருந்து சிவாவை,வலுக்கட்டாயமாக அருகே உள்ள யூ டியூபரின் கடைக்கு அழைத்துச் சென்று சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து அறிந்த அப்பகுதி பொதுமக்கள் கடையின் வெளியே குவிந்தனர்.கடையின் வெளியே நடந்த சம்பவங்களை தினகரன் நிருபர் அரங்கநாதன்(50), தினமலர் கல்யாணசுந்தரம்(70) ஆகியோர் காணொலி பதிவு செய்து கொண்டிருந்தனர்.அதைப்பார்த்த கபில்,அவரது தம்பி தனஞ்செழியன் உட்பட 20க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் ஆவேசத்துடன் அரங்கநாதன் மற்றும் கல்யாணசுந்தரம் ஆகிய இருவரையும் சுற்றிவளைத்துப் பிடித்து அந்தக் கடையின் உள்ளே தள்ளியுள்ளனர்.உள்ளே வைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.இவர்களின் அலறல் சத்தும் கேட்டதும் அங்கிருந்த பொதுமக்கள் கடையின் முன்பு குவிந்து கூச்சலிட்டனர்.

தகவலறிந்த சோளிங்கர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.உதவி ஆய்வாளர் முனீர் பாஷாவை சமஉ கபில் தொலைபேசி செய்து வரவழைத்தார்.சம்பவ இடத்திற்குச் சென்ற முனீர் பாஷா,கதவைத் திறந்து உள்ளே சென்றார்.அப்போது தினகரன் செய்தியாளர் அரங்கநாதன், தினமலர் நிருபர் கல்யாணசுந்தரம் ஆகியோர் பதிவு செய்து இருந்த காணொலிகளை உதவி ஆய்வாளர் முன்னிலையில் சமஉ கபில் அவரது தம்பி தனஞ்செழியன் ஆகியோர் அழித்துள்ளனர்.

இதையடுத்து அங்கிருந்து சமஉ கபில் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கிளம்பிச் சென்றனர்.தாக்குதலில் காயம் அடைந்த அரங்கநாதன்,கல்யாணசுந்தரம்,சிவா ஆகிய 3 பேரையும் அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதற்கிடையில்,இந்த தாக்குதல் சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய சமஉ மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்யவேண்டும் என்று கூறி காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தாக்குதலில் காயம் அடைந்த 3 பேரும் சோளிங்கர் காவல்துறையில் தனித்தனியாக புகார் மனு அளித்துள்ளனர். அதன்பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மேல் புகார் என்பதால் இதன் விசாரணை முறையாக நடக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளதாகப் பொதுமக்கள் கூறுகின்றனர்.

Leave a Response