மேகதாது அணைச் சிக்கல் – கர்நாடக அரசுக்கு ஒன்றிய அரசு முழுஆதரவு

காவிரிநீர்ப் பகிர்வுச் சிக்கல் தொடர்பாக உச்சநீதிமன்றம் 2018 இல் அளித்த தீர்ப்பில்,காவிரியின் குறுக்கே எந்தவிதமான கட்டுமானத்தையும் கர்நாடகா கட்டுவதற்கு தமிழகம்,கேரளா,புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதலைப் பெறவேண்டும் எனக் கூறியுள்ளது ஒன்றிய அரசுக்குத் தெரியுமா? இதற்கு கர்நாடகா ஒப்புதல் பெற்றுள்ளதா? ஆகிய விவரங்களை நீர்வளத்துறை அமைச்சர் தெரிவிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதில்ளித்து நீர்வளத்துறை இணை அமைச்சர் ஸ்ரீ ராஜ் பூஷன் சவுத்ரி நேற்று கூறியிருப்பதாவது….

காவிரி பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்றம் 2018 பிப்ரவரி 16 ஆம் தேதி அளித்த தீர்ப்பில்,காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டுமானத்தையும் கட்ட தமிழகம்,கேரளா,புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதலை கர்நாடகா பெறவேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.நடுவர் மன்றதீர்ப்பின் ஒரு பகுதியாக,காவிரிநீரை அந்தந்த மாநிலத்தில் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் உள்ளிட்ட தங்களது தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளவும்,பலனை அனுபவிக்கவும்,திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேகதாது அணையைப் பொறுத்தவரை,திட்ட அறிக்கை அளிக்கப்பட்டது.அதுகுறித்த விரிவான அறிக்கையை தீர்ப்பாய ஒப்புதலோடு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.கடந்த ஜூன் மாதத்தில் பிலிகுண்டுலுவில் கர்நாடகா உறுதி செய்யப்பட வேண்டிய நீர்வரத்து 9.19 டிஎம்சி.ஆனால் வந்தது 2.195 டிஎம்சி.ஜூலை மாதம் வரவேண்டியது 31.24 டிஎம்சி.ஆனால் வந்தது 0.459 டிஎம்சி.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேகதாது சிக்கலில் ஒன்றிய அரசு,கர்நாடக அரசுக்கு முழுமையான ஆதரவு தெரிவிக்கும் வகையில் இவ்வாறு கூறியிருப்பது தமிழ்நாட்டில் பேரரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response