
பெட்ரோலுடன் எத்தனால் கலப்பது குறித்த சர்ச்சை அதிகமாகியிருக்கிறது.
எத்தனால் கலந்த பெட்ரோல் (Ethanol-blended petrol) என்பது சாதாரண பெட்ரோலுடன் குறிப்பிட்ட சதவீத எத்தனாலை கலந்து உருவாக்கப்படும் ஒரு எரிபொருள்.எத்தனால் என்பது கரும்பு, சோளம், கோதுமை போன்ற ஸ்டார்ச் அல்லது சர்க்கரை நிறைந்த தாவரப் பொருட்களிலிருந்து நொதித்தல் முறையில் தயாரிக்கப்படும் ஒரு தூய ஆல்கஹால்.இந்தியாவில் எத்தனால் கலப்பு (EBP – Ethanol Blended Petrol) திட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.எத்தனாலில் ஆக்சிஜன் உள்ளடக்கம் அதிகமாக இருப்பதால்,எரிபொருள் முழுமையாக எரிகிறது.இதனால் வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பன் மோனாக்சைடு மற்றும் ஹைட்ரோகார்பன் போன்ற நச்சு வாயுக்கள் பெருமளவில் குறைகின்றன என்று சொல்லப்படுகிறது.
இதனால்,அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவுமின்றி இப்போதே பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.
எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்தினால் வாகனங்கள் அடிக்கடி பழுதாகும் அபாயம் இருக்கிறது என்கிறார்கள்.குறிப்பாக மாருதி நிறுவன வண்டிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன என்று சொல்லப்படுகிறது.
குறிப்பாக தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் எத்தனால் கலப்பு அதிகமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.இதனால் பாதிப்புகள் ஏற்படுகின்றன என்கிற புகார்கள் வந்ததால்,எத்தனாலை கலப்பதைக் கைவிடாமல்,எண்ணெய் சேமிப்பு இடங்களில் உள்ள தண்ணீரின் அளவை இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை சோதித்து எங்களுக்குத் தகவல் சொல்லவேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்களம்.
பெட்ரோலை அனுப்பும்போதே நல்லதாக அனுப்பினால் இந்தச் சிக்கல் எதுவும் இருக்காது.தப்பை எண்ணெய் நிறுவனங்களே செய்துவிட்டு தண்டனையை விற்பனையாளர்களுக்குக் கொடுக்கிறது என்று வருத்தப்படுகிறார்கள்.
இதுகுறித்து விவரமறிந்தவர்கள் கேள்வி கேட்டால்,அதிகவிலை கொடுத்து எத்தனால் கலக்காத நல்ல பெட்ரோல் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்களாம்.
அறிவிக்கப்படாமல் பெட்ரோல் விலையை உயர்த்திவிட்டார்கள் போலும்.
எத்தனால் கலந்த பெட்ரோல் விநியோகத்தில் ஒன்றிய அமைச்சர் நிதின்கட்கரி மகன் சம்பந்தப்பட்டிருக்கிறார்.அதனால் இப்படியெல்லாம் நடக்கிறது என்று செய்திகள் வந்ததும் அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றிருக்கிறார் நிதின்கட்கரி.
ஒரு பக்கம் எத்தனால் கலந்த பெட்ரோலை யாருடைய அனுமதியையும் பெறாமலே அனுப்புகிறார்கள் இன்னொருபக்கம் அதுகுறித்துப் பேசினால் சட்டப்படி மிரட்டுகிறார்கள் என்கிற புலம்பல்கள் கேட்கின்றன.
இதனால்,இந்தத்துறை சார்ந்தோர் நெஞ்சமெல்லாம் பெட்ரோல் இல்லாமலே பற்றி எரிந்துகொண்டிருக்கின்றனவாம்.
இது நல்லதிற்கில்லை என்கிறார்கள் நல்லோர்.
– முருகன்


