
இந்திய ஒன்றியத்தின் தலைநகரம் டெல்லியில் கடும் பனிமூட்டத்துடன் கூடிய காற்று மாசு தொடர்ந்து நீடித்து வருகிறது. பொதுமக்கள் சுவாசக் கோளாறுகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்தச் சூழலில்,டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய ஒன்றிய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அவர் பேசியதாவது….
நான் டெல்லிக்கு வந்து இரண்டு நாட்கள் தங்கினாலே எனக்குத் தொற்று (Infection) ஏற்பட்டு விடுகிறது. அந்த அளவிற்கு இங்கே காற்று மாசு அபாயகரமாக உள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சர் என்ற முறையில் நானே இதை ஒப்புக்கொள்கிறேன். டெல்லியின் காற்று மாசுபாட்டில் 40 சதவீதம் வாகனப் புகையால்தான் ஏற்படுகிறது. எ
இந்தியா ஆண்டுதோறும் சுமார் ரூ.22 இலட்சம் கோடி மதிப்பிலான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. இவ்வளவு பணம் செலவழித்து, நமது சொந்த நாட்டையே நாம் மாசுபடுத்துகிறோம். இது என்ன மாதிரியான தேசியவாதம்? இதற்குப் பதில் உயிரி எரிபொருட்களைப் பயன்படுத்தி நாம் ஏன் ‘ஆத்மநிர்பர் பாரத்’தை (சுயசார்பு இந்தியா) உருவாக்கக் கூடாது?
நான் இந்த நிகழ்ச்சிக்கு 100% எத்தனாலில் இயங்கும் ‘இன்னோவா’ காரில் வந்தேன். இந்த கார் பூஜ்ஜிய சதவீத மாசுபாட்டை வெளியிடுவதோடு, 60% மின்சாரத்தையும் உற்பத்தி செய்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்திய ஒன்றியத்தை மட்டுமின்றி டெல்லியிலும் பாஜகதான் ஆட்சி புரிகிறது.அப்படியிருக்கும் போது அந்தக் கட்சியைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சரே இப்படி ஒரு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பது, பாஜக வட்டாரங்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றன.இதனால், அரசியல் அரங்குகளில் மட்டுமின்றி உலகநாடுகள் மத்தியில் இந்திய ஒன்றியத்தின் மதிப்பு குறையும் என்பதால் பெரும் கவலை அடைந்திருக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.


