சின்னதம்பி குஷ்பு போல் போவோமா ஊர்கோலம் செல்லும் முதல்வர் – விமர்சனங்கள்

முதல்வர் விஜய் அடிக்கடி ஆய்வு என்கிற பெயரில் வெளியே வரத் தொடங்கிவிட்டார்.கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு,சென்னை மெட்ரோ ரயில் ஆய்வு என்று செய்துகொண்டிருக்கிறார்.

பொதுவாக,முதலமைச்சர்களாக இருப்பவர்கள்,அவர்களுடைய கனவுத்திட்டம்,ஆசைத்திட்டம் ஏதாவது நடைமுறைக்கு வந்தால் அதை அவ்வப்போது போய்ப்பார்த்து வருவார்கள்.

ஆனால்,விஜய் பொறுப்பேற்றபிறகு அவர் தொடங்கிய திட்டங்கள் எதுவும் இல்லை,முந்தைய அரசுகள் நடைமுறையில் வைத்திருந்த திட்டங்கள்தாம் எல்லாமே.

இந்நிலையில்,இவர் எதை ஆய்வு செய்கிறார்? எதற்காகச் செய்கிறார்? இதன் பலன் என்ன? என்கிற கேள்வி எல்லோருக்குமே இருக்கிறது.

இந்த ஆய்வுகளால் பலன் இருக்கிறதோ இல்லையோ பாதிப்பு நிறைய இருக்கிறதென்கிற குற்றச்சாட்டுகள் வரத்தொடங்கிவிட்டன.

அவர்,வருகிற பாதையையெல்லாம் சில மணி நேரங்கள் முன்பாகவே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறது காவல்துறை.

அதனால்,அன்றாடப் பணிகளுக்காகப் பறந்து கொண்டிருக்கும் சாமானிய மக்களுக்கு நிறைய சிரமங்கள் ஏற்படுகின்றன என்றும் சென்னை சாலைகளில் அவர்களுடைய குமுறல்களைக் கேட்கமுடிகிறதென்றும் பலர் பகிர்கிறார்கள்.

முதல்வர் விஜய்யின் இந்த திடீர் ஆய்வுகள் குறித்து பல்வேறு வகையில் கடும் விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

அவற்றில் ஒன்று,விஜய் பிறந்ததிலிருந்தே செல்வாக்காக வளர்ந்தவர்.நடிகரான பின்பு அரண்மனைக் கிளியாகிவிட்டார்.சின்னதம்பி படத்தில் குஷ்புவின் கதாபாத்திரம்போல் கூண்டுக்குள்ளேயே வளர்க்கப்பட்டிருக்கிறார்.
அதனால்தான் இப்போது முதல்வரானவுடன் காவல்துறை பாதுகாப்புடன் போவோமா ஊர்கோலம் என்று புறப்பட்டுவிட்டார்.

தலைமைச் செயலகத்தைச் சுற்றிப் பார்த்ததிலிருந்து தொடங்கி இப்போது சென்னையைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.இது அப்படியே விரிவடையலாம் என்று சொல்லப்படுகிறது.

மக்கள்தான் பாவம்.

– இரசிகன்

Leave a Response