
திமுக ஆட்சியில் டாஸ்மாக் மதுபான கொள்முதல் உட்பட பல வழிகளில் முறைகேடுகள் நடந்ததாகக்
குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகின்றன.அதனடிப்படையில்,முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி,டாஸ்மாக்
முன்னாள் நிர்வாக இயக்குநர் எஸ்.விசாகன்,டாஸ்மாக் முன்னாள் மண்டல முதுநிலை மேலாளர்கள் டி.ராமதுரை முருகன்,ஆர்.பன்னீர்செல்வம்,செந்தில் பாலாஜியின் முன்னாள் நேர்முக உதவியாளர் பாஸ்கர்,செந்தில் பாலாஜியின் நண்பர்கள் ரத்தேஷ் ராஜ்,மூலனூர் கார்த்திக் ஆகிய 7 பேர் மீது ஜூலை 28 ஆம் தேதி புதியவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தவழக்கில் முன்பிணை கோரி செந்தில்பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்தவழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ,கடந்த ஆட்சியில் தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்,விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.குதிரை பேர வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி செந்தில் பாலாஜி முறையாகத் திருவல்லிக்கேணி காவல்துறை முன்பாக ஆஜராகி வருகிறார்.வாகன டெண்டர் மற்றும் காலி
மதுபாட்டில்கள் சேகரிப்பில் அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை.அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கில்
இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.இந்த வழக்கில் செந்தில் பாலாஜியைக் கைது செய்ய எந்த அவசியமும்
இல்லை.எனவே முன்ஜாமீன் வழங்கவேண்டும் என்று வாதிட்டார்.
அரசு தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன்,டாஸ்மாக் நிர்வாகத்தில் கடந்த ஆட்சியில் நடந்த ஊழல் மற்றும் முறைகேடுகள் மொத்தமாக மறைக்கப்பட்டுள்ளன.அமலாக்கத்துறை சோதனை நடத்தி ஊழல் தொடர்பான முக்கிய ஆதாரங்களையும்,ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.இந்த
முறைகேடுகளுக்கும்,குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து முன்னாள் நிர்வாக இயக்குநர் விசாகன் தெள்ளத் தெளிவாக அமலாக்கத்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மூடப்பட்டதாக கூறிய பார்கள் மூலம் மட்டும் அரசுக்கு ரூ.32.81 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து டெண்டரில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளது.பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட பாட்டில்களை மதுபான ஆலைகளுக்கு வழங்கியதில் ரூ.143 கோடி முறைகேடாக கையாளப்பட்டுள்ளது.
இது தொடர்பாகச் செந்தில் பாலாஜியிடம் விரிவாக விசாரணை நடத்த வேண்டியுள்ளது.எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது.
இவ்வாறு வழக்கறிஞர் ஜான் சத்யன் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதற்கு முகாந்திரம் உள்ளது.செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. இந்த வழக்கில் செந்தில் பாலாஜியைப் காவலில் வைத்து விசாரிப்பதும் அவசியம்.எனவே,முன்ஜாமீன் மனு
தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.
இந்நிலையில்,உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டது.இதை அவசர வழக்காகக் கருதி விசாரணைக்கு எடுக்க வேண்டுமென உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் முன்னிலையில் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்தவழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் முகுல் ரோத்தஹி ஆகியோர்
முறையிட்டனர்.இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த்,வழக்கை இன்று விசாரணைக்கு
பட்டியலிடுவதாக உறுதியளித்தார்.
தமிழக சபாநாயகருக்கு எதிராக செயல்பட ரூ.35 கோடி குதிரைபேரம் நடந்ததாக கிருஷ்ணகிரி மாவட்டம்,ஊத்தங்கரை தொகுதி தவெக சமஉ இளையராஜா புகார் அளித்திருந்தார்.இந்தவழக்கில் திருவல்லிக்கேணி காவல்துறையினர் 14 பேரை கைது செய்தனர்.இந்தவழக்கில் செந்தில்பாலாஜி,அவரது தம்பி அசோக்குமாரும்
சேர்க்கப்பட்டுள்ளனர்.
இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்பிணை பெற்றனர்.எனினும்,இருவரும் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் தினமும் காலை 10:30 மணி, மாலை 5:30 மணிக்கு நேரில் சென்று கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.அதன்படி,செந்தில் பாலாஜி,அசோக்குமார் ஆகிய இருவரும் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தனர்.செந்தில்பாலாஜி நேற்று முன்தினம் மாலை கூட திருவல்லிக்கேணி காவல்நிலையம் சென்று கையெழுத்திட்டார்.
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முன்பிணை மனுவை தள்ளுபடி செய்த பிறகு நேற்று காலை திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் செந்தில் பாலாஜி கையெழுத்திடவில்லை.டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க தலைமறைவானதாகச் சொல்லப்படுகிறது.
திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் கையெழுத்திட வந்த அவரது தம்பி அசோக்குமார்,சகோதரர் செந்தில்பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லை.அதனால் மருத்துவமனை சென்றுள்ளார் என்று தெரிவித்தார்.எந்த
மருத்துவமனை என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், செந்தில் பாலாஜி மேல்முறையீடு மனுவை விசாரிக்கும்போது, தங்களது தரப்பு கருத்தைக்
கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு இலஞ்ச
ஒழிப்புத்துறை சார்பில் வழக்கறிஞர் விருந்தா பண்டாரி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அடிப்படையில் அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும் என்பதால் அத்தீர்ப்பை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.


