தமிழ்நிலத்தை ஆக்கிரமித்திருக்கும் சிங்கள இராணுவம் – யாழில் போராட்டம்

தமிழீழப் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் தமிழர் நிலங்களைக் கட்டாயமாகக் கையகப்படுத்தியது சிங்கள இராணுவம்.போராட்டம் முடிந்து 17 ஆண்டுகள் கடந்தும் அந்த நிலங்களை இன்னிம் சிங்கள இராணுவம் விடுவிக்கவில்லை.

இதனால்,அறவழிப் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.

அந்தவகையில், வலி – வடக்கில் மீள் குடியமர்வை வலியுறுத்தி யாழ் மாவட்டச் செயலகம் முன்பாகப்
பெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.

அதன்விவரம்…

வலி – வடக்கில் இருந்து மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 36 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தம்மை மீள்குடியேற்றக்கோரி அந்தப்பகுதி மக்கள் திங்கட்கிழமை (15.06.2026) காலை யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாகப் பெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

1990 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் திகதி வலி – வடக்கு மக்கள் அவர்களது பூர்வீக நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு அவர்களது வாழ்விடங்கள் உயர்பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு இராணுவத்தினரால் கைவசப்படுத்தப்பட்டுள்ளது.யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் கடந்த ஆண்டுகளில் பகுதியளவாகக் காணிகள் விடுவிக்கப்பட்ட போதும் இன்னும் 2 ஆயிரத்து 300 ஏக்கர் பொதுமக்களின் காணி படையினர் பிடியிலேயே உள்ளன.

அந்தக் காணிகளை விடுவிக்கக்கோரியே அந்தப்பகுதி மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர்.அதன் ஒரு கட்டமாகவே 36 ஆம் ஆண்டு நிறைவான அன்று நூற்றுக்கணக்கான வலி – வடக்கு மக்கள் திரண்டு
இப்போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்தப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களோடு,மதத்தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

வலி – வடக்கு மக்களின் போராட்டத்துக்கு,தமிழ்த் தேசியப் பேரவை தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியிருந்தது. அதோடு,யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்திலும் கலந்துகொண்டிருந்தது.

இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன்,தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் கலந்துகொண்டு ஆதரவளித்தனர்.

– செல்வம்

Leave a Response