
சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் நடிகர் இராகவா லாரன்ஸ்.அப்போது அவர் கூறியதாவது….
அரசியலுக்கு வரலாமா?வேண்டாமா? எனக்கேட்டு சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தேன்.சின்னக்குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை என்னை அரசியலுக்கு வருமாறு உரிமையோடு அழைக்கின்றனர்.நான் ஒரு முடிவை எடுத்துள்ளேன்.விரைவில் என் இரசிகர்களை அழைத்து, மேடையில் என் தாயை அமரவைத்து,அந்த நல்ல முடிவை அறிவிக்க உள்ளேன்.
திருநங்கைகள் என்னைப் பார்க்க வந்துள்ளதாகச் சொன்னார்கள்,ஆனால் இவ்வளவு பேர் இங்கே வந்துள்ளார்கள். நீங்கள் நினைத்தது நடக்கப்போகிறது.மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.இதனால்தான் அரசியலுக்கு வரலாமா என மக்களிடம் கேட்டேன்.அதில் என்ன தவறு? நான் இனி ஏதாவது பெரியமுடிவு எடுத்தால் மக்களிடம் கேட்டுத்தான் செயல்படுவேன்.
தவெக அரசின் ஒரு மாத காலச் செயல்பாடு மிகச் சிறப்பாக உள்ளது. கோயில்கள், பள்ளிகள் அருகில் இருந்த மதுக்கடைகளை மூடும் முடிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கல்வித்துறை அமைச்சர், அறநிலையத்துறை அமைச்சரின் செயல்பாடுகள் நன்றாக உள்ளது. புதிய அரசுக்குக் கொஞ்சம் கால அவகாசம் கொடுக்கவேண்டும்.
உதாரணமாக,நாம் புதுஏரியாவில் வாடகை வீட்டுக்குச் சென்றால்,அந்தவீடு வெளியில் இருந்து பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.வீட்டுக்குள் சென்றால்தான் அங்கு என்னென்ன பிரச்னைகள் இருக்கிறது என்பது தெரியும்.அங்கிருக்கும் தெருநாய்கள் கூட நம்மைப் பார்த்துக் குரைக்கும்.அப்போது அதற்கு பிடித்த பிஸ்கட்டை போடவேண்டும்.சில தெருநாய்கள் பிரியாணிதான் சாப்பிடும்.அப்போது அதற்குப் பிடித்த உணவைக் கொடுத்து அதைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.ஒரு வீடு,ஒரு நாய்க்கே இப்படி என்றால்,ஒரு நாட்டையும்,மாநிலத்தையும் பார்ப்பவர்களுக்கு காலஅவகாசம் வேண்டும்.எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை வைப்பது பொறாமையால்தான்.தவெகவை விமர்சிப்பதற்கு முன்னால்,நாம் என்ன செய்தோம் என்பதை யோசிக்க வேண்டும்.
திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறேனா என்பதை விரைவில் இரசிகர்கள் முன்பு அறிவிப்பேன்.எல்லாக் கட்சிகளின் தலைவர்களும் எனக்கு நண்பர்கள்தான்.அவர்களின் ஆசியைப் பெற்றே என் முடிவை அறிவிப்பேன்.
ரஜினியின் ஆசிர்வாதம் இல்லாமல் நான் எதையும் செய்வதில்லை.அவரின் ஆசியோடுதான் எல்லாவற்றையும் செய்வேன்.
அண்ணாமலை நன்றாகப் படித்தவர்,அரசியல் புரிதல் உள்ளவர்.அவரைப் போன்ற புதியவர்கள் அரசியலுக்கு வருவது நல்லதுதான்.
தவெகவினரை தற்குறி என விமர்சனம் செய்கிறார்கள்.ஆனால் அவர்கள் தற்குறி இல்லை அம்புக்குறிகள்.அவர்கள் கண்ணை மூடித் திறப்பதற்குள் தவெகவை வெற்றிபெற வைத்துவிட்டார்கள்.மக்களுக்கு யார் நல்லவர்கள் கெட்டவர்கள் எனத் தெரியும்.நான் மக்களுக்கு உண்மையாக இருப்பேன்.
நான் பணம் சம்பாதிக்கவோ,வெறுப்பு அரசியல் செய்யவோ அரசியலுக்கு வரமாட்டேன்.இப்போது நூறு பேருக்கு உதவி செய்தால்,அரசியலுக்கு வந்தால் இலட்சம் பேருக்கு உதவி செய்வேன்.பணம் முக்கியமில்லை,மனிதன் எப்படி வாழ்ந்தான்,எப்படி மறைந்தான் என்பதே முக்கியம்.நான் மறையும்போது இந்த ஊரே அழும்
இவ்வாறு அவர் கூறினார்.
ராகவா லாரன்ஸின் இந்த பேச்சு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் யாரை தெருநாயுடன் ஒப்பிட்டு பேசுகிறார்? மக்களையும், அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்களையும் தெருநாய்களுடன் ஒப்பிடுவதா என்று, பல்வேறு தரப்பினர் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.தனது பேச்சுக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பிய நிலையில் நேற்றிரவு சமூக வலைத்தளத்தில் ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்தார்.
அதில்…
எனது சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் நான் கூறிய கருத்து தொடர்பாக ஏற்பட்டுள்ள தவறான புரிதலை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
நான் எப்போதும் எனது இரசிகர்களையும் பொதுமக்களையும் என் தாய்க்கு நிகராக மதித்து வந்துள்ளேன்.ஆனால், நான் மக்களை நாய்களுடன் ஒப்பிட்டுப் பேசியதாக சிலர் தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதும்,தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதுமாகும்.
நான் கூறியதன் உண்மையான பொருள் என்னவென்றால்,ஒருவர் புதியவீட்டிற்குக் குடியேறும்போது அங்குள்ள சூழல்,அப்பகுதியில் வாழும் மக்கள் மற்றும் சுற்றுப்புறத்தைப் புரிந்துகொள்ள சிறிதுகாலம் தேவைப்படும் என்பதுதான்.அதற்கு எடுத்துக்காட்டாக அப்பகுதியில் இருக்கும் நாய்களின் பழக்கவழக்கங்கள் பற்றியும் குறிப்பிட்டேன்.
நான் மதிக்கும் மக்களை,என் தாய்க்கு இணையாகக் கருதும் மக்களை,நாய்களுடன் ஒப்பிட்டுப் பேசும் அளவிற்கு மனமில்லாதவன் அல்ல.புதியசூழலுடன் பழகுவதற்கு காலஅவகாசம் தேவைப்படும் என்பதையே நான் கூறினேன்; எந்த இடத்திலும் மக்களைக் குறிப்பிட்டு அவ்வாறு பேசவில்லை.
எனவே,அனைவரும் முழுகாணொளியையும் பார்த்து,நான் உண்மையில் என்ன கூறினேன் என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தொடர்ந்து எனக்கு அளித்து வரும் ஆதரவுக்கும் புரிதலுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.


