நீட் தேர்வை இரத்து செய்ய மறுக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கிட வலியுறுத்தியும், நீட் தேர்வில் நடந்தேறிய மோசடிகளுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திமுக மாணவர் அணி சார்பில் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, திமுக மாணவர் அணிச் செயலாளர் எழிலரசன் சமஉ தலைமை வகித்தார். சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் நே.சிற்றரசு, தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் பூச்சி முருகன், மாணவர் அணித் தலைவர் இரா.ராஜீவ்காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மருத்துவர் அணிச் செயலாளர் என்.எழிலன், திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்ஸ் என்னாரஸ் பெரியார், பிரின்ஸ் கஜேந்திர பாபு உள்ளிட்ட கல்வியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் கூட்டணி மாணவர் அமைப்புகளின் தலைவர்கள் உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், நீட் என்னும் அநீதியை இரத்து செய் என்ற பதாகைகளைக் கையில் ஏந்தி மாணவர்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் எழிலரசன் பேசுகையில்…
நீட் தேர்வை ஒழிக்கும் வரை திமுக மாணவர் அணி ஓயாது, தேவைப்பட்டால் இந்தியாவின் தலைநகர் டெல்லியிலும் இந்தப் போராட்டத்தை எடுத்துச் செல்வோம் என்றார்.
ஆர்ப்பாட்டத்தின்போது, ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது….
நீட் தேர்வு அகில இந்திய பிரச்னையாக மாறியுள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் இராகுல் காந்தியும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் கேள்வி எழுப்பியபோது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம் என்று சபாநாயகர் கூறினார். ஆனால் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தை முடித்துக் கொண்டு போய் விட்டார்கள் என்றால் இதற்கெல்லாம் பதில் சொல்லப் பயப்படுகிறார்கள் என்றுதான் அர்த்தம். ஒரு காலத்தில் திமுக மட்டுமே நீட் பற்றி பேசிக் கொண்டிருந்தது. இன்று அனைத்துக் கட்சிகளும் பேசுகிறார்கள். நடிகர் விஜய், தாமாக முன்வந்து தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை ஆதரிப்பதாகக் கூறியுள்ளார். இராகுல் காந்தி இந்த நீட் தேர்வு இரத்தை அகில இந்திய அளவில் கொண்டு சேர்த்துள்ளார். விரைவில் நல்ல முடிவு வரும். இவ்வாறு கூறினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு சர்ச்சைக்குள்ளானது. “நான் ஒரு வக்கீல். எழிலரசன் பி.இ., பி.எல்., இவையெல்லாம் எங்களுக்கு குலப் பெருமையால், கோத்திரப் பெருமையால் வந்தததா? இந்த இயக்கம் போட்ட பிச்சை என்பதை நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். திராவிட இயக்கம் இல்லையென்றால், கம்யூனல் அரசாணை இல்லை என்று சொன்னால், இத்தனை பேர் டாக்டர் பட்டம் பெற்றிருக்க முடியாது.
நான் பட்டம் பெறும் காலத்தில் ஒருவர் பி.ஏ. பட்டம் பெற்றால், உடனடியாக ஒரு பெயின்ட்ரை அழைத்து பி.ஏ. என்று போர்டு எழுதி மாட்டுவார்கள். காரணம் என்னவென்றால், அந்த ஊரிலேயே ஒரே ஒரு பி.ஏ. தான் இருக்கும். ஆனால், இப்போது நாய்கூட பி.ஏ. பட்டம் வாங்கும் நிலை வந்துவிட்டது நம்ம ஊரில். ஆனால், யாராவது போர்டு மாட்டுகிறார்களா? எனவே, இந்த வளர்ச்சிக்கு யார் காரணம் என்பதை மக்களை எண்ணிப் பார்க்க வேண்டும். அதை அழிப்பதற்காகத்தான் இந்த நீட் தேர்வு வந்திருககிறது என்று பேசினார்.
இந்தப் பேச்சு சர்ச்சையான நிலையில் அதற்கு அவர் விளக்கமளித்துள்ளார். அதில்,
ஒரு காலத்தில், ஒரு சில பிரிவினருக்கு மட்டுமே கிடைத்த கல்வி, அனைவருக்கும் கிடைக்கக் காரணம் திராவிட இயக்கம்தான் என்பதே தனது பேச்சின் நோக்கம். மேலும், நாய்கூட பி.ஏ. பட்டம் பெறுகிறது என்பது உள்நோக்கத்துடன் சொல்லப்பட்ட கருத்து அல்ல
இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்துள்ளார்.