பாஜகவுக்கு சாதகமாக இராகுல்காந்தி – பினராயி விஜயன் குற்றச்சாட்டு

அண்மையில் தில்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய காங்கிரசு மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான இராகுல் காந்தி,

கேரளத்தில் நிலவும் அரசியல் போட்டி காரணமாக பினராயி விஜயனைத் தழுவமாட்டேன் எனக் கூறியதாக செய்தி வெளியாகியது.

இந்நிலையில்,கேரள மாநிலம்,கோழிக்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள முன்னாள் முதலமைச்சரும்,மார்க்சிய பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவருமான பினராயி விஜயனிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த பினராயி விஜயன்…

யார் யாரைத் தழுவுகிறார்கள் என்பது குறித்து எனக்குக் கவலையில்லை.ஆனால்,இராகுல் காந்தி,நரேந்திர மோடியைத் தழுவும் புகைப்படத்தை நாம் அனைவரும் பார்த்தோம்.இராகுல் காந்தி,மோடியைத் தழுவுவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.ஆனால்,அவரது கருத்துகள் ஒரு குறிப்பிட்ட அரசியல் செய்தியை வெளிப்படுத்துகிறது.இது இராகுல் காந்தியின் அணுகுமுறையையும் அவர் இந்தியா கூட்டணியை எவ்வாறு பார்க்கிறார் என்பதையும் பிரதிபலிக்கிறது.இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதம் தேவை.ஆனால்,இப்போது இதுகுறித்து நான் விரிவாகப் பேசவிரும்பவில்லை.

நாங்கள் மட்டுமல்ல,அகிலேஷ் யாதவ்,தேஜஸ்வி யாதவ் போன்ற தலைவர்களும்,காங்கிரசு அல்லாத பிற முக்கியக் கட்சிகளும் கூட கூட்டத்தின்போது ஆட்சேபனைகளை எழுப்பி உள்ளார்கள்.காங்கிரசின் நிலைப்பாட்டுக்கு எதிராகப் பேசினார்கள்.

இந்தச் சூழலுக்கு காங்கிரசின் அணுகுமுறையும் இராகுல் காந்தியின் அணுகுமுறையுமே காரணம்.இராகுல் காந்தியின் இந்த அணுகுமுறை,இந்தியா கூட்டணியை வலுப்படுத்தவில்லை என்பதே உண்மை.மாறாக,நான் முன்பே கூறியதுபோல இது பெரும்பாலும் பாஜகவுக்கே உதவுகிறது.இத்தகைய செயல்கள் மூலம் பாஜகவின் நலன்களுக்குச் சாதகமாகச் செயல்படுபவராக இராகுல் காந்தி மாறுகிறார்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response