
இந்திய ஒன்றியம் முழுவதும் மாநிலங்களவையில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன் 18 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியபிரதேசத்தில் 3 இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது.230 உறுப்பினர்களைக் கொண்ட மபி சட்டப்பேரவையின் தற்போதைய பலம் 228 ஆகும்.இவற்றில் பாஜகவிடம் 164 உறுப்பினர்களும், காங்கிரசிடம் 64 உறுப்பினர்களும் உள்ளனர்.
கட்சிகளின் பலத்தின் அடிப்படையில், பாஜக இரண்டு இடங்களையும், காங்கிரசு ஒரு இடத்தையும் எளிதாக வெல்லும் நிலையில் இருந்தது.
இந்தத் தேர்தலில் தருண் சுக், ரஜ்னீஷ் அகர்வால் ஆகியோரை பா.ஜ.க வேட்பாளராக அறிவித்தது.காங்கிரசு சார்பில் மீனாட்சி நடராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.இருப்பினும்,மூன்றாவது இடத்தைக் கைப்பற்றுவதில் குறிவைத்துள்ள பா.ஜ.க திடீரென காங்கிரசின் வேட்பாளர் மீனாட்சி நடராஜனை எதிர்த்து பாஜக சார்பில் மகேஷ் கேவத்தை களமிறக்கியது.
இந்த நிலையில் நேற்று வேட்புமனு பரிசீலனையின்போது காங்கிரசு வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
ஏன்?
மூன்றாவது இடத்திற்குப் போட்டியிடும் பாஜக வேட்பாளர் மகேஷ் கேவத்,தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒரு புகாரை அளித்தார்.அதில்,தெலங்கானாவில் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு குறித்த தகவலை மீனாட்சி நடராஜன் வேண்டுமென்றே மறைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.அந்த அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
மபி தேர்தல் நடத்தும் அதிகாரியின் இந்த நடவடிக்கைக்கு எதிராகப் போராட காங்கிரசு மேற்கொண்ட முயற்சியும் பலனளிக்கவில்லை.காங்கிரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தலைமையிலான குழுவினர் தேர்தல் அலுவலகத்தை அடைந்தபோது,தேர்தல் ஆணையத்தின் பெரும்பாலான அதிகாரிகள் மாலை 6 மணிக்கு மேல் அங்கிருந்து சென்றுவிட்டதாகத் தகவல்கள் கூறின.
மபி தலைமைத் தேர்தல் அதிகாரி கியானேஷ் குமார் அலுவலகத்தில் இருந்தபோதிலும்,காங்கிரசு தரப்பிலிருந்து அவரைச் சந்திக்க முன்அனுமதி பெறப்படவில்லை என்று கூறி சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது.
இதை எதிர்த்து காங்கிரசுக் கட்சியினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து காங்கிரசு வேட்பாளர் மீனாட்சி நடராஜன் கூறுகையில்,மத்தியப் பிரதேசத்தில் முன்பு தேர்தல்களில் தில்லுமுல்லு செய்த பாஜகவினர், இப்போது ராஜ்யசபா தேர்தலை சீர்குலைத்துள்ளனர் என்றார்.
இதுகுறித்து பா.ஜ.க வேட்பாளர் மகேஷ் கேவத் தரப்பு வழக்கறிஞர் சங்கேத் குப்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது…
தெலங்கானா நீதிமன்றம் ஒன்றில் காங்கிரசு வேட்பாளர் மீனாட்சி நடராஜன் மீது ஒரு குற்றவியல் வழக்கு நிலுவையில் உள்ளது.அது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்படவில்லை.இதன் அடிப்படையிலேயே தேர்தல் நடத்தும் அதிகாரி அவரது வேட்புமனுவை நிராகரித்துள்ளார்.இந்தத் தகவல் வேண்டுமென்றே மறைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி,பிரமாணப் பத்திரத்தில் இத்தகவலை வழங்குவது கட்டாயமாகும்.இந்த விதியின் கீழ் மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவை எதிர்த்து பாஜக வேட்பாளர் மகேஷ் கேவத் ஆட்சேபனை தெரிவித்திருந்தார்.அவரது வேட்புமனுவில் வேறு பல குறைபாடுகளும் கண்டறியப்பட்டன என்றார்.
காங்கிரசின் மத்தியப் பிரதேசப் பொறுப்பாளர் ஹரிஷ் சவுத்ரி கூறுகையில்…
மீனாட்சி நடராஜன் மீது தெலங்கானாவில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.அவரைத் துன்புறுத்துவதற்காகவே பா.ஜ,க இத்தகைய வழக்குகளைக் குறிப்பிட்டுள்ளது.தெலங்கானா நீதிமன்றத்திடமிருந்து மீனாட்சி நடராஜனுக்கு ஒரு ஷோகாஸ் நோட்டீஸ் மட்டுமே வந்திருந்தது.அதை பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.ஒரு வழக்கு பதிவு செய்யப்படும்போதுதான் வேட்புமனுவில் தகவல் அளிக்கப்பட வேண்டுமே தவிர நோட்டீஸ் பெறும்போது அல்ல என்பது தேர்தல் ஆணையத்தின் தெளிவான அறிவுறுத்தல் ஆகும்.தொழில்நுட்ப ரீதியாகப் பார்த்தால், மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவை நிராகரிக்க முடியாது என்று கூறினார்.
எப்படியிருப்பினும்,மீனாட்சி நடராஜனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டிருக்கிறது.எனவே, பாஜகவின் 3
வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தமிழ்நாட்டில் தவெகவின் ஆதரவில் ஒரு மாநிலங்களவை உறுப்பினரைப் பெற்ற மகிழ்ச்சியில் இருந்த காங்கிரசுக்கு மத்திய பிரதேசத்தில் சொந்த பலத்தில் உறுப்பினராகும் வாய்ப்பு கைநழுவிப் போயிருக்கிறது.


