போதைப்பொருள் கடத்தலில் அதிமுக தவெகவினர் தொடர்பு – பரபரப்பு

மியான்மார்,டென்மார்க் போன்ற நாடுகளில் இருந்து உயர்ரக போதைப் பொருட்கள் இந்திய கடலோர எல்லையான மன்னார் வளைக்குடா வழியாக இலங்கைக்கு கடந்த 2024 மார்ச் 5 ஆம் கடத்தப்படுவதாக மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.அதன்படி அன்று அதிகாலை 5 மணிக்கு மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இந்திய கடலோரக் காவல்படையினருடன் இணைந்து நடத்திய கூட்டு அதிரடி சோதனையில்,இலங்கைக்குக் மீனவர்கள் படகுகள் மூலம் கடத்தப்பட்டு வந்த ரூ.108 கோடி மதிப்புள்ள 99 கிலோ உயர்ரக கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அப்போது கைது செய்யப்பட்ட நபர்கள் அளித்த தகவலின்படி,அந்த போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கோவை மாவட்டம் சத்தியமங்கலம் சிவநந்தபுரம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ஜான் பிரிட்டோ(57) என்பவர் இருந்தது தெரியவந்தது. இவர் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலின் நேரடித் தொடர்பில் உள்ள முக்கிய போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்று விசாரணையில் தெரியவந்தது.ஜான் பிரிட்டோதான் இந்தியாவுக்கான போதைப் பொருள் கடத்தலை தலைமை ஏற்று இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தி வந்தது தெரியவந்தது.

இவர் மூலம் 15 நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தி வந்ததும்,அதன்மூலம் ஜான்பிரிட்டோ பல ஆயிரம் கோடி ரூபாய் சட்டவிரோதமாக சம்பாதித்து,அந்தப் பணத்தை தனது உறவினர்கள் மூலம் பல நிறுவனங்களில் முதலீடு செய்து வந்ததும் தெரியவந்தது.பல ஆண்டுகளுக்கு மேலாக ஜான்பிரிட்டோ சர்வதேச போதைப் பொருள் கும்பல் தலைவனாக இருந்து பல ஆயிரம் டன் போதைப் பொருட்கள் மத்திய போதைத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு தெரியாமல் ‘குருவிகள்’ உதவியுடன் இராமநாதபுரம் மற்றும் மண்டபம் பகுதிக்கு போதைப் பொருள்கள் கடத்தி வந்து மீனவர்கள் உதவியுடன் இலங்கைக்கு சர்வதேச கடல் எல்லையைத் தண்டி போதைப் பொருள் கடத்தி வந்தது தெரியவந்தது.தமிழகத்திற்குள்ளும் போதைப் பொருளை பல ஆண்டுகளாக ஜான்பிரிட்டோ விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

அதேநேரம்,ஜான் பிரிட்டோ உத்தரவுப்படி சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகர் 11 ஆவது தெருவைச் சேர்ந்தவர் யேசுராஜ் (35),மோனிஷா ஷீலா,பிலோமன் பிரகாஷ் ஆகிய 3 பேர் உதவியுடன் 2024 ஆம் ஆண்டு சென்னையில் இருந்து தொடர்வண்டி மூலம் கடத்திச் செல்லும்போது,மதுரை தொடர்வண்டி நிலையத்தில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிரடி சோதனை நடத்தி ரூ.150 கோடி மதிப்புள்ள 37.645 கிலோ மெத்தம்பெட்டமைனை பறிமுதல் செய்தனர்.இந்த வழக்கிலும் ஜான்பிரிட்டோ முக்கிய குற்றவாளி என மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு விசாரணையில் தெரியவந்தது.

இப்படி கடத்தி வரும் போதைப் பொருட்களை சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜான் பிரிட்டோ இராமநாதபுரத்தில் ரெமிஸ்தான்,ராமிஷ்,ஜான்சான்,பிரதாப் ஆகிய மீனவர்களுக்கு இலட்சக்கணக்கில் பணம் கொடுத்து படகு உரிமையாளர்கள் உதவியுடன் கடல்மார்க்கமாக இலங்கைக்குக் கடத்த முயன்றது தெரியவந்தது. இந்தப்பணம் அனைத்தும் ஜான் பிரிட்டோ ஹவாலா மூலம் வரும் பணத்தைக் கொடுத்து தடையின்றி போதைப் பொருள் கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது.

ஜான்பிரிட்டோவை கேரளா,குஜராத் மாநிலங்களில் போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் தேடி வருகின்றனர். இதனால் அவர் இந்தியாவில் இருந்து தலைமறைவாகி தற்போது மியன்மார், டென்மார்க் உள்ளிட்ட நாடுகளில் பதுங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.அதேநேரம் ஜான் பிரிட்டோவை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து தேடி வருகின்றனர்.

இந்த வழக்குகள் போதைப் பொருள் கடத்தல் வழக்கு சிறப்பு நீதிமன்றங்களில் நடந்து வருகிறது.அதேநேரம் போதை பொருள் கடத்தலில் பல நூறு போடி சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அமலாக்கத்துறை ஜான் பிரிட்டோ மற்றும் அவரது உறவினர்கள் மற்றும் கூட்டாளிகள் மீது வழக்குப் பதிவு செய்து அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்தவகையில் கடந்த மே 26 ஆம் தேதி அமலாக்கத்துறை இலங்கைக்கு சட்டவிரோதமாக ரூ.258 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகள் தொடர்பாக ஜான் பிரிட்டோ கூட்டாளிகள் வசிக்கும் சென்னை மற்றும் இராமநாதபுரத்தில் சோதனை நடத்தினர்.5 இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்தனர்.குறிப்பாக சோதனையில்,ஜான் பிரிட்டோ போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பல நூறு கோடி பணத்தை தனது இரத்த சொந்தங்கள் மூலம் சட்டவிரோதமாக அவர்கள் நடத்தும் நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த ஆவணங்கள் சிக்கியதாகத் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

அதேநேரம்,2018 ஆம் ஆண்டு போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜான்பிரிட்டோ போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பல ஆயிரம் கோடி பணத்தை சட்டவிரோதமாக வெளிநாடுகளில் உறவினர்கள் நடத்தும் நிறுவனங்கள் மற்றும் அவர்கள் பெயரில் முதலீடு செய்து இருந்தது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக நடந்த சோதனையில்,ஜான் பிரிட்டோவுக்கு உடன் பிறந்த சகோதரியான லீமா ரோஸ் மார்ட்டின்(54),லீமா ரோஸ் மார்ட்டின் மகளான சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி மஹாராணி சின்னம்மா சாலையில் வசித்து வரும் டெய்சி ஆதவ் அர்ஜூனா(30) மற்றும் உறவினர் ஜான் கென்னடி ஆகியோர் பினாமியாக இருந்து வந்ததும்,அதற்கான ஆவணங்களும் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு கேரளா மாநிலம் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.அப்போது சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் தொடர்பாக போதைப் பொருள் கடத்தல்மன்னன் ஜான்பிரிட்டோ,அவரது சகோதரி லீமா ரோஸ் மார்ட்டின்,லீமா ரோஸ் மார்ட்டின் மகளான டெய்சி ஆதவ் அர்ஜூனா,உறவினர் ஜான் கென்னடி ஆகியோர் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் என்று தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து எர்ணாகுளம் சிறப்பு நீதிமன்றம் ஜான் பிரிட்டோ,லீமா ரோஸ் மார்ட்டின்,டெய்சி ஆதவ் அர்ஜூனா,ஜான் கென்னடி ஆகியோர் வெளிநாடுகள் தப்பிச் செல்லமுடியாதபடி அவர்களின் கடவுச்சீட்டுகளை முடக்கி நடவடிக்கை எடுத்தது.

இந்தவழக்கில் லீமா ரோஸ் மார்ட்டின் மற்றும் அவரது மகள் டெய்சி ஆதவ் அர்ஜூனா ஆகியோர் பல இலட்சம் முன்வைப்பு தொகை செலுத்தி முன்பிணையில் வெளியே வந்துள்ளனர்.அப்போது எர்ணாகுளம் சிறப்பு நீதிமன்றம் லீமா ரோஸ் மார்ட்டின் அவரது மகள் டெய்சி ஆதவ் அர்ஜூனா ஆகியோர் நீதிமன்ற நிபந்தனைகளை மீறி வெளிநாடுகள் சென்றால் அவர்களைக் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் வழங்கி உத்தரவிட்டது.

அவசரத் தேவைக்கு வெளிநாடு செல்ல வேண்டி இருந்ததால், ரூ.1 இலட்சம் நிபந்தனை தொகை செலுத்திவிட்டு நீதிமன்ற உத்தரவுப்படி செல்லலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தற்போது அதிமுக சார்பில் லீமா ரோஸ் மார்ட்டின் லால்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். லீமா ரோஸ் மார்ட்டின் மகள் டெய்சி ஆதவ் அர்ஜூனா கணவரான ஆதவ் அர்ஜூனா தவெக கட்சி சார்பில் சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியில் வெற்றி பெற்றார்.தற்போது டெய்சி ஆதவ் அர்ஜூனா கணவர் தவெக தலைவர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் சிறிய துறைமுகங்கள்,நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறைகளின் அமைச்சராகவும் உள்ளார்.

இந்நிலையில், மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் தேடப்பட்டு வரும் போதைப் பொருள் கடத்தல்மன்னன் ஜான்பிரிட்டோவின் உடன்பிறந்த சகோதரி லீமா ரோஸ் மார்ட்டின் அவரது சகோதரியின் மகள் டெய்சி ஆதவ் அர்ஜூனா ஆகியோர் வெளிநாடுகள் செல்லவேண்டி கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தங்களது கடவுச்சீட்டுகளை விடுவிக்கக் கோரி மனுதாக்கல் செய்துள்ளனர்.அப்போது தான் லீமா ரோஸ் மார்ட்டின்,அவரது மகள் டெய்சி ஆதவ் அர்ஜூனா ஆகியோருக்கும் சர்வதேச போதைப் பொருள் குற்றவாளியான ஜான்பிரிட்டோவுக்கும் உள்ள உறவு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

லீமாரோஸ் மார்ட்டின், லால்குடி தொகுதியில் போட்டியிட்டபோது தனது விண்ணப்பத்தில் தன் மீது 4 வழக்குகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.அதில் தனது சகோதரன் மற்றும் மகள் மீது உள்ள சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்ற எண் 533, 2018 வழக்கை முதல் வழக்காகக் குறிப்பிட்டுள்ளார்.இதன்மூலம் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜான்பிரிடோவுக்கும் லீமா ரோஸ் மார்ட்டின் அவரது மகள் டெய்சி ஆதவ் அர்ஜூனா தொடர்புகள் அதிகாரப்பூர்வமாக நிரூபணமாகி உள்ளது.

இந்தத் தகவல்கள் ஊடகங்களில் வெளியானதால்,தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Response