தமிழக முதல்வர் மணமுறிவு வழக்கு – நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

நடிகரும்,முதல்வருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில்,கடந்த மார்ச் 24 ஆம் தேதி இணையம் மூலம் செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் சங்கீதா மணமுறிவு வழக்கு தொடர்ந்திருந்தார்.அந்த வழக்கு, ஏப்ரல் 20 ஆம் தேதி அன்று முதல்கட்ட விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.அப்போது,விஜய் மற்றும் சங்கீதா ஆகிய இருவரும் கட்டாயம் நீதிமன்றத்தில் நேர்நிற்க உத்தரவிடப்பட்டிருந்தது.

அப்போது,தவெக சார்பில் தமிழக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து விஜய் தேர்தல் பரப்புரை செய்யும் பணி இருப்பதால் தன்னால் அன்று நேரில் வரஇயலாது என்றும்,விசாரணை தேதியை ஒத்திவைக்கக் கேட்டும் மனு அளித்தார்.

அதன் அடிப்படையில்,அந்த வழக்கு விசாரணை ஜூன் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே,நடிகர் விஜய் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராகப் பதவி ஏற்றுள்ளார்.

இந்நிலையில்,செங்கல்பட்டு மாவட்ட குடும்பநல நீதிபதி சுஜாதா முன்பு நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் இருதரப்பு வழக்கறிஞர்களும் காணொலி மூலம் வழக்கை நடத்தவேண்டும் என்று கேட்டனர்.

இதற்கு நீதிபதி சுஜாதா,வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்கை நடத்த சங்கீதா தரப்புக்குச் சம்மதமா? என்று கேட்டார்.இதற்கு அவர்கள் சரி என்றனர்.

வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கை நடத்த மனு தான் போட்டிருக்கிறீர்கள்,ஆனால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கை நடத்த நான் அனுமதி வழங்கவில்லை என்றார்.

இதற்கு முதல்வர் விஜய் தரப்பு வழக்கறிஞர்கள்,‘ஏற்கனவே நாங்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரிக்க மனு கொடுத்திருந்தோம்.அதற்கு அப்போதிருந்த நீதிபதி அனுமதி வழங்கியிருக்கிறார்’ என்றனர்.அதற்கு நீதிபதி சுஜாதா, ‘ஏற்கனவே இருந்த நீதிபதியிடம் அப்பியரன்ஸ் கேட்டு பெட்டிசன் மட்டுமே கொடுத்திருக்கிறீர்கள்.ஆனால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கை நடத்த அவர்களும் அனுமதி அளிக்கவில்லை,நானும் கொடுக்கவில்லை.ஏதாவது ஒரு வழக்கறிஞர் மட்டும் பேசுங்கள்.அனைவரும் பேசினால் எப்படி? யாராவது ஒருவர் வாதாடுங்கள்.அதேபோன்று இந்தவழக்கில் ஆஜராதவதற்கு வக்காலத்து இன்னும் தாக்கல் செய்யவில்லை’ என்றார்.

இதற்கு விஜய் தரப்பு வழக்கறிஞர்கள்,‘ஏற்கனவே நாங்கள் வக்காலத்து போட்டுவிட்டோம்’ என்றனர்.அதற்கு நீதிபதி,‘வக்காலத்து தாக்கல் செய்திருந்தால் அதற்கான பிரிண்ட் அவுட் ஏன் வைக்கவில்லை’ என்றார்.அப்படி என்றால் வழக்கை ஒத்திவைக்கட்டுமா? என்று நீதிபதி கேட்டார்.அதற்கு விஜய் தரப்பு வழக்கறிஞர்,‘எங்களுக்கு அவகாசம் தாருங்கள்.அடுத்த விசாரணையின்போது பிரிண்ட் அவுட்டுடன் வைக்கிறோம்’ என்றனர்.

உடனே நீதிபதி,முதல்வர் விஜய்யின் வீட்டு முகவரி இருக்கிறது.ஆனால் மெயில் ஐடி இல்லை.அதேபோன்று சங்கீதாவின் மெயில் ஐடியும் இல்லை.முதலில் விவகாரத்து கேட்டிருக்கிறீர்கள்.அதற்கு முதலில் இருவரையும் சமரச மையத்துக்கு அனுப்பவேண்டும்.அதற்குப்பிறகுதான் இருதரப்பு வாதத்தையும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யவேண்டும்.இந்தவழக்கில் வக்காலத்து தாக்கல் செய்யவேண்டும்.அடுத்ததாக மெயில் ஐடி தரவேண்டும். அடுத்ததாக பிரிண்ட்அவுட் தரவேண்டும்.அதன்பிறகுதான் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கை நடத்துவதா? அல்லது நேரடியாக நடத்துவதாக என்பது பற்றி முடிவெடுக்கமுடியும்’ என்றார்.

விஜய் தரப்பு வழக்கறிஞர்கள் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.அதற்கு நீதிபதி,‘ஏன் ஒருமாதம் நேரம் கேட்கிறீர்கள்’ என்று கேட்டார்.அதற்கு வழக்கறிஞர், ‘முதல்வருக்கு ஏராளமான பணிகள் இருக்கிறது.அதனால் இந்த தேதியில் விசாரணை நடத்த அனுமதி கொடுங்கள்’ என்றார்.அன்று வேலைநாளா என்பதைப் பாருங்கள் என்று நீதிபதி கூறினார்.அந்த தேதி வெள்ளிக்கிழமை வருகிறது என்று கூறினர்.இதைத் தொடர்ந்து,ஆகஸ்ட் 7 ஆம் தேதி அடுத்த விசாரணை நடைபெறும் என்றுகூறி, வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

Leave a Response