மதிமுக உறுப்பினர்கள் பதவி விலக வைகோ கட்டளை – ஏற்பார்களா? எதிர்ப்பார்களா?

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களில்,அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, சத்யபாமா ஆகிய 4 அதிமுக சமஉக்கள் பதவியிலிருந்து விலகினர்.உடனே,ஆளும் தவெகவில் ஐக்கியமானார்கள்.

இந்நிலையில் நேற்று,அதிமுக முன்னாள் அமைச்சரான சி.விஜயபாஸ்கர், பதவி விலகினார்.புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி சமஉவான அவர் தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகரை நேரில் சந்தித்து, தன் கைப்பட எழுதிய பதவி விலகல் கடிதம் வழங்கினார்.அப்போது, சட்டசபை செயலாளர் சாந்தியும் உடன் இருந்தார்.

எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருந்த நிலையில்,சி.விஜயபாஸ்கர் இந்த முடிவை எடுத்துள்ளார்.அவர், அதிமுகவில் இருந்து பதவி விலகிய 5 ஆவது சமஉ ஆவார்.இதனால், அதிமுக சமஉக்களின் பலம் 47 இல் இருந்து 42 ஆகக் குறைந்துள்ளது.

இந்நிலையில்,இன்னும் இருவர் தங்கள் சமஉ பொறுப்பிலிருந்து விலகவிருக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.

கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் இராஜேந்திரன் மற்றும் சீர்காழி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் செந்தில்நாதன் ஆகியோர் இருவரும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள்.

இவர்கள் மதிமுகவைச் சேர்ந்தவர்கள்.

இப்போது மதிமுகவும் திமுக கூட்டணியிலிருந்து விலகி தவெக கூட்டணியில் இணையவிருக்கிறது.இதனால் இவ்விருவரையும் சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகவேண்டுமென வைகோ கூறியிருக்கிறார்.

அதையேற்று அவர்கள் பதவி விலகுவார்கள் என்றும் வைகோ உத்தரவை எதிர்த்து பதவியில் நீடிப்பார்கள் என்றும் இருவேறு கருத்துகள் வருகின்றன.

என்ன நடக்கப்போகிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Response