2026 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி – எடப்பாடி தகவல்

நேற்று சேலம் மாவட்டம் ஓமலூரில் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது திமுக ஆட்சி குறித்து பல குற்றச்சாட்டுகளைக் கூறினார்.

தேர்தல் தொடர்பாகப் பேசிய அவர், டெல்லியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என மக்கள் நினைத்ததால் பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது.இந்தியா கூட்டணிக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளனர். அந்தக் கூட்டணியில் ஒற்றுமை இல்லை. விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லை. இந்தத் தேர்தல் முடிவுகள் மூலம் இந்தியா கூட்டணி உள்ளதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ஈரோடு தேர்தலில் யாரும் களத்தில் இல்லாதபோது, திமுக பெற்றது போலி வெற்றியாகும். அதிமுக கட்சி நிர்வாகிகளின் வாக்குகளை திமுக-வினரே போட்டுள்ளனர். கள்ள வாக்குகளின் மூலம் பெரிய வெற்றி பெற்றதாகச் சொல்கிறார்கள். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதே தொகுதியில் என்ன நிலைமை என்பதை அந்தக் காலகட்டத்தில் நாங்கள் சொல்கிறோம்.

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கு 13 மாதங்கள் உள்ளன.அப்போது அதிமுக தலைமையில் பலமான கூட்டணி அமையும். தேர்தல் அறிவித்த பிறகு தான் கூட்டணி குறித்துச் சொல்ல முடியும். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமையுமா என்றால் எங்களைப் பொறுத்தவரை பலமான கூட்டணி அமையும். உங்களை அழைத்து தெரிவிப்போம். இன்னும் 6 மாதம் போனால் கூட்டணி வடிவம் பெறும்.திமுக தலைவர் எங்கள் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஒரே கொள்கை கொண்டது என்கிறார்.ஒரே கொள்கை என்றால் எதற்கு வெவ்வேறு கட்சிகள்? ஒரே கட்சியாக இருக்க வேண்டியதுதானே?

கூட்டணி என்பது அனைத்து வாக்குகளும் சிதறாமல் ஒருங்கிணைந்து எதிரியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அமைக்கப்படுகிறது. கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் அமைக்கப்படுவது. அப்படித்தான் நாங்கள் கூட்டணி அமைப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தச் சந்திப்பில்,தில்லி பாஜக வெற்றியைப் பாராட்டி இந்தியா கூட்டணிக்கு மிக எதிராகப் பேசியிருக்கிறார்.அதோடு கொள்கை மாறுபாடு இருந்தாலும் எதிரியை வீழ்த்த ஓரணியாக இணைவதுதான் கூட்டணி என்று தெரிவித்திருக்கிறார்.

அவருடைய இந்தக் கருத்தைத் தொடர்ந்து,2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கத் தயாராகிவிட்டார் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Leave a Response