
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. திமுக 59 இடங்களிலும், 47 இடங்களிலும் வெற்றி பெற்ற நிலையில்,எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
ஆட்சி அமைக்க மொத்தம் 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் ஆதரவு அளித்தன.
அவர்கள் மீது முழுநம்பிக்கை இல்லாததால், 5 ஆண்டுகள் இடையூறின்றி ஆட்சி தொடர கூடுதல் சமஉக்களின் பலம் அவசியம் என்பதால், அதிமுக சமஉக்களின் ஆதரவை தவெக கோரியது. தவெகவை ஆதரிப்பது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், நத்தம் விஸ்வநாதன், லீமா ரோஸ் உள்ளிட்ட 25 சமஉக்கள் முடிவு செய்து, தனி அணியாகச் செயல்பட்டனர்.
அதேநேரம், தவெகவுக்கு ஆதரவு இல்லை என்ற நிலைப்பாட்டில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 22 சமஉக்கள் கொண்ட ஒரு அணி செயல்பட்டு வந்தது.
சட்டப்பேரவையில் மே 13 ஆம் தேதி நடைபெற்ற தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் சி.வி.சண்முகம் தலைமையிலான அதிமுக சமஉக்கள் 25 பேர் ஆதரவாகவும்,எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான 22 சமஉக்கள் எதிராகவும் வாக்களித்தனர்.
முன்னதாக 2 அணிகளும் சட்டப்பேரவை அதிமுக தலைவர், கொறடாவை தனித்தனியே தேர்ந்தெடுத்து பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரிடம் கடிதம் அளித்தனர். அதன்மீது பேரவைத் தலைவர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இரு அணிகளும் எதிரணியைச் சேர்ந்த சமஉக்களை கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யுமாறு கடிதம் அளித்தனர்.
இதற்கிடையே, சி.வி.சண்முகம் அணியில் இருந்த இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்யபாமா (தாராபுரம்), ஜெயக்குமார் (பெருந்துறை) ஆகிய 4 பேரும் தங்கள் சமஉ பதவியை உதறிவிட்டு தவெகவில் இணைந்தனர். இதன் தொடர்ச்சியாக, முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் டிஜிபியும், அதிமுக முன்னாள் சமஉவுமான நட்ராஜ், அண்ணா தொழிற்சங்கப் பேரவை முன்னாள் செயலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்டோரும் அடுத்தடுத்து தவெகவில் இணைந்தது, கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சி.வி.சண்முகம் அணியைச் சேர்ந்த எஸ்.பி.வேலுமணி,எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்துப் பேசியதில்,சமரசம் ஏற்பட்டு இருஅணிகளும் ஒன்றாக இணைந்தன.ஆனால்,தனி அணியாகச் செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டு, மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு, உடனே மீண்டும் பதவி வழங்க முடியாது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமியை இதுவரை சந்திக்கவில்லை. அவர்கள் இருவரும் தங்கள் மாவட்டங்களில் உள்ள ஆதரவாளர்களை அழைத்து தீவிர ஆலோசனை நடத்தி வந்தனர். அவர்கள் இருவரும் சமஉ பதவியை விட்டு விலகி, தவெகவில் இணையலாம் என அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இந்நிலையில், மக்கள் மாளிகையில் ஆளுநர் ஆர்.வி.அர்லேகரை அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி,பாமஉ தனபால் ஆகியோர் நேற்று சந்தித்து, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எழுதிய கோரிக்கை மனுவை வழங்கினர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது….
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், மோசமான குதிரைபேர அரசியலை தவெக நடத்தி வருகிறது.தலைமைச் செயலகத்தை கட்சி அலுவலகம்போல மாற்றி,எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை குறிவைத்து ஆளுங்கட்சி நடத்தும் குதிரைபேரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.
அதிமுக மீது விசுவாசம் கொண்டுள்ள உண்மைத் தொண்டர்களின் கடுமையான உழைப்பு,தியாகத்தால் வெற்றி பெற்ற 4 எம்எல்ஏக்களிடம் இருந்து,கோட்டையின் கீழ்தளத்தில் உள்ள பேரவைத் தலைவர் அறையில் ராஜினாமா கடிதம் எழுதி வாங்குவதும்,அடுத்த 10 நிமிடத்தில் முதல்மாடியில் உள்ள தவெக அமைச்சர் அறையில் அவர்களிடம் கட்சி உறுப்பினர் அட்டையை வழங்குவதும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி நாடகத்தை,குதிரை பேரத்தை அம்பலப்படுத்தி உள்ளது.
தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாத சூழலில்,அதிமுகவை உடைக்க நினைத்தும் முடியாத நிலையில், பதவியேற்ற உடனே ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களின் பின்னணியை ஆராயவேண்டும்.மிகப்பெரிய அளவில் பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக தகவல் வருகிறது.எனவே,ஜனநாயகத்தைக் காக்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.அமலாக்கத்துறையும் இதில் கவனம் செலுத்தவேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் அக்ரிகிருஷ்ணமூர்த்தி கூறும்போது…
தமிழகத்தில் நடைபெற்று வரும் குதிரை பேரம்மூலமாக அதிமுக எம்எல்ஏக்களை விலைபேசிக் கொண்டிருக்கும் தவெக அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவேண்டும்.அரசியலமைப்புச் சட்ட விதி 167-ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட்ட மனுவை ஆளுரிடம் வழங்கி உள்ளோம்.தலைமைச்செயலகத்தையே கட்சி அலுவலகமாக தவெகவினர் மாற்றிவிட்டனர் என்றும் மனுவில் கூறியுள்ளோம்.ஆளுநர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது
இவ்வாறு அவர் கூறினார்.


