தமிழ்நாடு மாணவர்களுக்கு உரிய ரூ.2,152 கோடியை பறித்து வேறு மாநிலங்களுக்கு ஒன்றிய பாஜக அரசு அளித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது….
தமிழ்நாட்டுக்கு எதிரான ஒன்றிய பாஜக அரசின் விரோத மனப்பான்மைக்கு அளவே இல்லாமல் போகிறது. தேசிய கல்விக் கொள்கையையும், அதன்வழி மும்மொழிக் கொள்கையையும் திணிப்பதை நிராகரித்த காரணத்துக்காக, அப்பட்டமான அச்சுறுத்தல் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
தமிழ்நாடு மாணவர்களுக்குரிய ரூ.2,152 கோடியைப் பறித்து, தற்போது வேறு மாநிலங்களுக்கு அளித்துள்ளனர். தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் மாணவர்களை தண்டிக்கும் நோக்கில் இத்தகைய செயலைச் செய்கின்றனர்.
இந்திய வரலாற்றில் ஒரு மாநிலத்தை அரசியல் ரீதியாகப் பழிவாங்க, மாணவர்களின் கல்விக்குத் தடை ஏற்படுத்தும் அளவுக்கு வேறு எந்த அரசும் இரக்கமின்றி நடந்தது இல்லை. தமிழ்நாடு, தமிழ் மக்கள் மீதான வெறுப்பு மற்றும் நமக்கு இழைக்கப்படும் அநீதியின் முழு உருவம் பாஜக என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது.
இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட பதிவில்….
தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியான பிஎம்ஸ்ரீ (PMShri) திட்டத்தில் இணைய வேண்டும் என ஒன்றிய அரசு கட்டாயப்படுத்துகிறது. அத்திட்டத்தில் இணைந்தால், தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த நேரிடும் என்பதால், முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி நாம் உறுதியுடன் மறுத்து வருகிறோம்.
இதனால், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ரூ.2,152 கோடியை, பாஜக ஆளும் குஜராத், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அளித்துள்ளது. இவ்வாறு வஞ்சக மனப்பான்மையோடு செயல்படும் ஒன்றிய அரசை தமிழ்நாடு மாணவர்கள், ஆசிரியர்கள் மன்னிக்க மாட்டார்கள். மாநில உரிமையைப் பெற தொடர்ந்து போராடுவோம். கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவோம்
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.