18 ஆவது மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழுகட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19,26 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டத் தேர்தல்கள் நடந்துள்ளன.
இந்நிலையில் இந்தத் தேர்தல் பரப்புரைகளில் பிரதமர் மோடி பேசிய அனைத்தும் பொய்கள் என்கிற அதிர்ச்சிகரமான் கட்டுரை ஒன்றை Scroll இணையதளம் வெளியிட்டுள்ளது.
அதன் தமிழாக்கம்…
ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 25 வரை, மோடி பேசிய பொய்களும், வெறுப்பு பேச்சுகளும்….
ஏப்ரல் 21 – பான்ஸ்வாரா, இராஜஸ்தான்.
மோடி : காங்கிரசு தேர்தல் அறிக்கையில் இந்துப் பெண்களின் தங்க நகைகள், தாலிகள் உள்ளிட்ட தனியார் உடைமைகள் கைப்பற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மை : காங்கிரசு தேர்தல் அறிக்கையில், தனியார் உடைகள் கைப்பற்றுவது குறித்தோ, அல்லது பெண்களின் தாலிகள், தங்க நகைகள் குறித்தோ எவையும் இடம்பெறவில்லை.
மோடி : காங்கிரசின் கடந்த கால ஆட்சியில், இந்தியாவில் முன்னுரிமை பெற்றவர்கள் – இஸ்லாமியர்கள் என தெரிவிக்கப்பட்டது.
உண்மை : 2009 இல் அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங், “இந்தியாவில் சிக்கல்களைச் சந்தித்து வரும் சமூகத்தினரான பட்டியலினத்தினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்கள், பெண்கள், குழந்தைகள் என அவரும் முன்னேற்றமடைய வேண்டும்” எனப் பேசினார். ஒரு தனிப்பட்ட மதத்தைக் குறிப்பிட்டுக் கூறவில்லை.
மோடி : காங்கிரசு ஆட்சியில் ஊடுருவி வந்தவர்களுக்கு (இஸ்லாமியர்கள்), அதிகக் குழந்தைகள் உடையவர்களுக்கு (இஸ்லாமியர்கள்) மக்கள் சொத்துகள் தாரைவார்க்கப்பட்டன.
உண்மை : இஸ்லாமியர்கள் ஊடுருவி வந்தவர்கள் என்பதற்கும், அதிகக் குழந்தைகள் உடையவர்கள் என்பதற்கும் எவ்வித தகுந்த ஆதாரமும் இல்லை.
ஏப்ரல் 22 – அலிகர், உத்தரப் பிரதேசம்.
மோடி : காங்கிரசு ஆட்சிக்கு வந்தால் வருவாய், உடைமை குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, தனியார் உடைமைகள் கையகப்படுத்தப்படும்.
உண்மை : “பிற்படுத்தப்பட்டவர்கள், பழங்குடியினர், பொது வகுப்பைச் சேர்ந்த ஏழைகள், சிறுபான்மையினர் என அனைவருக்கும் தக்க உரிமை வழங்கப்படும்” : இராகுல் காந்தி. தனியார் உடைமைகள் கையகப்படுத்தப்படும் என எந்த முன்மொழிவும் தெரிவிக்கப்படவில்லை.
மோடி : வாரிசு சொத்துகள், பெண்களின் உடைமைகளில் சில காங்கிரசால் பறிக்கப்படும்.
உண்மை : 1961 இல் நடைமுறைப்படுத்தப்பட்ட, சமவுரிமை சட்டமான, நில உச்சவரம்பு சட்டத்தின் வழி, மிகவும் பின்தங்கியவர்களுக்கு நிலம் பகிரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் ஏற்கனவே, இந்தியாவின் 21 மாநிலங்களில் அமலில் இருக்கிறது.
ஏப்ரல் 23 – டோங்க்-சவாய் மாதோபூர், இராஜஸ்தான்.
மோடி : காங்கிரசு ஆட்சிக்கு வந்தால், தேவைக்கு அதிகமான சொத்துகள் கையகப்படுத்தப்படும். அதாவது, இரண்டு வீடு உங்களிடம் இருந்தால், அதில் ஒரு வீட்டை அரசு எடுத்துக்கொள்ளும்.
உண்மை : காங்கிரசு அறிக்கையிலும், காங்கிரசு தலைவர்கள் பேச்சுகளிலும் கையகப்படுத்துவது தொடர்பான எவ்வித முன்மொழிவுகளும் இடம்பெறவில்லை.
மோடி : இந்தியாவின் சொத்துகளுக்கு முதன்மை உரிமை பெற்றவர்கள் இஸ்லாமியர்கள் என மன்மோகன் சிங் தெரிவித்திருக்கிறார்.
உண்மை : இந்தியாவில் முதன்மை பெற்றவர்களாக மன்மோகன் சிங் அடையாளப்படுத்தியது, பொருளியலில் பின் தங்கியிருக்கும், பட்டியலினத்தினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்கள், பெண்கள், குழந்தைகள், பெண்கள், சிறுபான்மையினர் ஆகியோர் தான் என்ற தரவு உள்ளது.
ஏப்ரல் 24 – சாகர், மத்தியப் பிரதேசம்.
மோடி : கர்நாடக மாநிலத்தில், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான (OBC) இடஒதுக்கீட்டில், இஸ்லாமியர்களை இணைத்து, OBC-களுக்கான வேலைவாய்ப்பைப் பறித்துள்ளது காங்கிரசு.
உண்மை : இந்தியாவின் 14 மாநிலங்களில், இஸ்லாமியர்கள் OBC இடஒதுக்கீடு பெற்று வருகின்றனர். அதில் மோடி ஆட்சி செய்த குஜராத்தும் ஒன்று. அதுமட்டுமல்லாது, கர்நாடகத்தில் இஸ்லாமியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கொடுத்தது, பா.ஜ.க கூட்டணியில் இருக்கிற முன்னாள் பிரதமர் தேவ கவுடா தான்.
ஏப்ரல் 24 – சர்குஜா, சத்தீஸ்கர்.
மோடி : மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடுகளை முன்மொழிந்து, SC, ST, OBC இடஒதுக்கீட்டிற்கு அச்சுறுத்தல் விடுகிறது காங்கிரசு.
உண்மை : பொருளாதாரம் மற்றும் சமூக அளவில் பின் தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க செய்ய மட்டுமே, காங்கிரசு திட்டமிட்டது.
மோடி : கர்நாடகத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின், காங்கிரசு முன்மொழிவுகள் புறக்கணிக்கப்பட்டு தலித் மற்றும் பழங்குடியினர் உரிமை மீட்கப்பட்டது.
உண்மை : கர்நாடகத்தில் ஆட்சியமைத்த பா.ஜ.க, இஸ்லாமியர்களுக்கு வழங்கி வந்த 4% இடஒதுக்கீட்டை நீக்கியதே தவிர, அதனை, தலித் மற்றும் பழங்குடியினர்களுக்காகப் பயன்படுத்தவில்லை.
மோடி : காங்கிரசு ஆட்சிக்கு வந்தால், பரம்பரை சொத்துக்கான வரி (Inheritance Tax) அமலுக்கு வரும்.
உண்மை : காங்கிரசு தேர்தல் அறிக்கையில், பரம்பரை சொத்துக்கான வரி குறித்த எந்தத் தகவலும் இடம்பெறவில்லை.
ஏப்ரல் 24 – பேதுல், மத்தியப் பிரதேசம்.
மோடி : காங்கிரசு தனக்கான வாக்கு வங்கியைப் பெரிதாக்க, நடப்பு இடஒதுக்கீடு முறையைத் தகர்த்து, மதத்தின் பெயரில் புதிய இடஒதுக்கீடு முறையைக் கொண்டு வரும்.
உண்மை : காங்கிரசு தேர்தல் அறிக்கையில், மதத்தின் அடிப்படையிலான இடஒதுக்கீடு குறித்தும், தனியார் சொத்துப் பகிர்வு குறித்தும் எவ்விதத் தகவலும் இடம்பெறவில்லை.
மோடி : கடந்த காலங்களில் பரம்பரை சொத்துக்கான வரியை அமலுக்குக் கொண்டு வர, காங்கிரசு பல வேலைகளில் ஈடுபட்டது.
உண்மை : 2011 இல் பரம்பரை சொத்து குறித்து முன்மொழியப்பட்டாலும், அதனை காங்கிரசுக் கட்சி முன்னெடுக்கவில்லை. பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு கூட, அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பரம்பரை சொத்துக்கான வரி குறித்து முன்மொழிந்தார்.
ஏப்ரல் 25 – ஆக்ரா, உத்தரப் பிரதேசம்.
மோடி : மதத்தின் பெயரால், 27% OBC இட ஒதுக்கீட்டிற்கு தடையிடத் திட்டமிட்டுள்ளது காங்கிரசு.
உண்மை : இது போன்ற எந்தக் கருத்தும் காங்கிரசு தேர்தல் அறிக்கையில் இடம்பெறவில்லை. காங்கிரசு தலைவர்களும் எவ்வித நம்பிக்கையும் விதைக்கவில்லை.
மோடி : 55% மக்களின் பரம்பரை சொத்துகளைக் கையகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது காங்கிரசு.
உண்மை : காங்கிரசு தலைமை, தேர்தல் அறிக்கை என எவற்றிலும், இது குறித்த எவ்விதத் தகவலும் இல்லை.
ஏப்ரல் 25 – முரைனா, மத்தியப் பிரதேசம்.
மோடி : இந்திரா காந்தி இறந்த பின், அவரது சொத்துகளைப் பெற, பரம்பரை சொத்து வரியை (Inheritance tax) நீக்கினார் ராஜீவ் காந்தி.
உண்மை : 1985 ஆம் ஆண்டு வி.பி. சிங், நிதியமைச்சராக இருந்த போது, நீக்கப்பட்டது தான் இவ்வரி. இந்த சட்டம் 16 மார்ச் 1985-க்குப் பிறகு இறந்தவர்களுக்குத் தான் செல்லுபடியாகும். ஆனால், இந்திரா காந்தி கொல்லப்பட்டது, அக்டோபர் 31, 1984.
ஏப்ரல் 25 – ஆன்லா, உத்தரப் பிரதேசம்.
மோடி : காங்கிரசுக் கட்சி, பொருளாதாரக் கணக்கெடுப்பு மட்டுமல்ல, அனைத்து நிறுவனங்களிலும் கணக்கெடுப்பு நடத்த இருக்கிறது. அதில், ஒரு பிற்படுத்தப்பட்ட குடும்பத்தில் இருவர் வேலையில் இருந்தால், அதில் ஒருவரின் வேலையைப் பறிக்கத் திட்டமிட்டுள்ளது.
உண்மை : இது போன்ற எந்த நடவடிக்கையும், காங்கிரசு தெரிவிக்கவில்லை. சமூக – பொருளாதாரக் கணக்கெடுப்பு மற்றும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, நாட்டின் ஜனநாயகத்தன்மை பாதுகாக்கப்படும் என்று மட்டும் தான் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்தக் கட்டுரை கூறுகிறது.