
மகாராஷ்டிரா மாநிலத்தில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (யுபிடி) கட்சியைச் சேர்ந்த 6 பாராளுமன்ற உறுப்பினர்கள்,தில்லியில் நேற்று நடைபெற்ற அக்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.கட்சி சார்பில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் கலந்து கொள்ளாததால்,அவர்கள் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியில் இணைய இருப்பது உறுதியாகியுள்ளது.
நாகேஷ் ஆஸ்திகர், சஞ்சய் தேஷ்முக், சஞ்சய் ஜாதவ், சஞ்சய் தினா பாட்டீல், ஓம் பிரகாஷ் ராஜேநிம்பல்கர், பாவ்சாகேப் வக் சவ்ரே ஆகிய 6 பாராளுமன்ற உறுப்பினர்களும் சிவசேனாவில் இணைவதற்கான கோரிக்கை அடங்கிய கடிதத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சிவசேனா (யுபிடி) கட்சியைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்களும் அணி மாறுவதை உறுதிப்படுத்தும் மற்றொரு நிகழ்வாக, அவர்களுக்கு மகாராஷ்டிர அரசு ஒய் பிளஸ் பாதுகாப்பை வழங்கியுள்ளது.
இந்நிலையில்,சிவசேனா (யுபிடி) கட்சியின் நாடாளுமன்றக்குழு கூட்டத்துக்குப் பின்னர் தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத்…
இன்று நடைபெற்ற கூட்டத்தில் அரவிந்த் சாவந்த்,ராஜாபாவ் வாஜே,அனில் தேசாய் ஆகிய மூன்று மக்களவை உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.கூட்டத்தில் பங்கேற்காத உறுப்பினர்கள் கட்சியின் கொறடா உத்தரவை மீறியுள்ளனர்.எனவே,அவர்கள்மீது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்.அவர்களின் உறுப்பினர் பதவியை இரத்து செய்வது குறித்து பரிசீலிப்போம்.
இன்னமும் அவர்கள் எங்கள் கட்சியின் உறுப்பினர்களாகவே உள்ளனர்.எங்கள் சின்னத்தில்தான் வெற்றி பெற்றனர். கொறடா உத்தரவை மீறியதால் அவர்கள் சட்டரீதியிலான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
பாஜக நாட்டின் அரசியலை,குறிப்பாக மகாராஷ்டிர அரசியலைக் களங்கப்படுத்தி உள்ளது.அதற்கான விலையை அவர்கள் கொடுக்க வேண்டியிருக்கும்.ஒரு முக்கியமான நபரிடமிருந்து எனக்கு ஓர் அழைப்பு வந்தது.ஒவ்வொரு எம்பிக்கும் ரூ.50 கோடி வழங்கப்பட உள்ளதாகவும்,முன்பணமாக ரூ.15 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.மாற்றுக் கட்சியில் இணைய விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்களின் தற்போதைய பதவியை ராஜினமா செய்துவிட்டுச் செல்லட்டும்
இவ்வாறு அவர் கூறினார்.
அவருடைய இந்தப் பேட்டி மூலம்,அணி மாறும் ஒவ்வோரு உறுப்பினருக்கும் 50 கோடி கொடுக்கப்படுகிறது என்கிற அதிர்ச்சிச் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


