ஜாபர்சாதிக் கூட்டாளியின் திடீர் மனு – போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு சிக்கல்

நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு உணவுப்பொருள் ஏற்றுமதி என்கிற பெயரில் போதைப் பொருள் கடத்தி ரூ.2,000 கோடி வரை வருமானம் ஈட்டிய குற்றச்சாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேரை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) காவல்துறையினர் டெல்லியில் பிப்ரவரி 24 ஆம் தேதி கைது செய்தனர்.

இதன் பின்னணியில் செயல்பட்டது திரைப்படத தயாரிப்பாளரும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில், திமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார். தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் மார்ச் 9 ஆம் தேதி டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

அவர் கைதான பின்பு அவரிடம் நடத்திய விசாரணையின்போது கிடைத்த தகவல்கள் அடிப்படையில் மார்ச் 13 ஆம் தேதியன்று சதா என்கிற சதானந்தம் கைது செய்யப்பட்டார்.

அதாவது ஜாபர்சாதிக் முதலில் கைது செய்யப்படுகிறார் அவர் கொடுத்த தகவல்கள் அடிப்படையில் சதானந்தம் கைது செய்யப்பட்டார் என்பதுதான் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரின் அறிவிப்பு.

இப்போது அதில் திடீர் திருப்பம் ஒன்று நடந்திருக்கிறது.

சதானந்தம் சார்பில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதில்,சதானந்தம் அதிகாரப்பூர்வமாகக் கைது செய்யப்பட்டார் என்று அறிவிப்பதற்கு சுமார் பத்துநாட்கள் முன்பாகவே அவரை என்சிபி அதிகாரிகள் பிடித்துவிட்டனர்.உடனடியாக நீதிமன்றத்தில் நேர்நிறுத்தாமல், பழனியில் இருக்கும் பொதினி விடுதி எனும் தனியார் விடுதியில் பல நாட்கள் சட்டவிரோதமாக அடைத்து,அதன் பிறகே கைது செய்துள்ளனர்

எபவே, 04-03-24 முதல் 14-03-24 வரையிலான என்சிபி சிறப்புக் குழு (NCB Special Team) விசாரணை அதிகாரிகளின் CAF/CDR ரிப்போர்ட் மற்றும் என்சிபியின் சென்னை மண்டல அலுவலகத்தின் சிசிடிவி காட்சிகள் ஆகியவற்றை சமர்ப்பிக்க உத்திரவிடவேண்டும்

இவ்வாறு கோரிக்கை விடுத்து, டெல்லி பாட்டியாலா NDPS சிறப்பு நீதிமன்றத்தில் சதானந்தம் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவில் கோரப்பட்டுள்ள விசயங்கள் நீதிமன்றத்தில் தாக்கலாகும்போது மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்குப் பெரும் பின்னடைவு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response