ஓ.பி.எஸ் இபிஎஸ் ஆகியோரை அதிமுகவில் இருந்து நீக்க தீர்மானம் – பரபரப்பு

அதிமுகவினர் சசிகலாவோடு பேசினால் நடவடிக்கை என்று ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி அதிமுக நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட இணைச்செயலாளர் ஆறுமுக பாண்டியன், ஒன்றிய மாணவரணிச் செயலாளர் செண்பகராமன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

கூட்டத்தில், ‘அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தொடர்ந்து நீடிக்க வேண்டும், அவரது தலைமையில் அதிமுக இயங்க வேண்டும், சசிகலா அதிமுக தொண்டர்களிடம் தொலைபேசி மூலம் உரையாடி வரும் சூழலில் அவருடன் பேசும் தொண்டர்கள், நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்கும் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் செயலை வன்மையாகக் கண்டிப்பது, கட்சி அடிப்படை விதிகளுக்கு மாறாக தொடர்ந்து இதே நிலை நீடித்தால், எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் கட்சியிலிருந்து நீக்குவதற்கு தொண்டர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்துவது’ உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அண்மையில், எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். அப்படி ஒரு பதவியே இல்லை. இவர்களே போட்டுக் கொள்கிறார்கள். மேலும், கட்சியின் தலைமையை தொண்டர்கள் தான் தேர்ந்தெடுக்க முடியும் என்றும் தொண்டர்களின் துணையோடு எல்லாவற்றையும் மாற்றுவேன் என்றும் சசிகலா பேசியிருந்தார்.

அப்படியிருக்கும்போது கோவில்பட்டி அதிமுகவினர் இப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response