திலீபன் நினைவிடத்தின் இன்றைய இழிநிலை – குமுறும் தமிழர்கள்


இந்தியப்படை ஈழம் சென்றிருந்த காலகட்டம். விடுதலைப்புலிகள், ஈழத் தமிழ் மக்கள் சார்பில் 5 கோரிக்கைகளை 13-09- 1987 அன்று இந்தியா உயரதிகாரிகளின் கையில் நேரடியாகக் கிடைக்கக்கூடியதாக அனுப்பி 24 மணி நேர அவகாசம் கொடுத்திருந்தார்கள் ஆனால் 15-09-1987 வரை எந்தப் பதிலும் தூதுவரிடமிருந்து கிடைக்காத காரணத்தினால் சாகும்வரை உண்ணாவிரதமும் மறியல் போராட்டமும் நடத்துவதேயென தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதேசப் பொறுப்பாளர்களின் கூட்டத்தில் 13-09-1987 அன்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படிதான் திலீபனின் தியாகப் பயணம் ஆரம்பித்தது.

1.பயங்கரவாதத் தடைச் சட்டத் தின் கீழ் இன்னும் தடுப்புக் காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.
2.புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களக் குடியேற்றம் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
3.இடைக்கால அரசு நிறுவப்படும் வரை “புனர்வாழ்வு” என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
4.வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
5.இந்தியா அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்க்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு தமிழ்க் கிராமங்கள் பாடசாலைகள் ஆகியவற்றில் குடிகொண்டுள்ள இராணுவ பொலிஸ் நிலையங்கள் மூடப்பட வேண்டும்.

ஆகிய ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.

மக்கள் புரட்சி வெடிக்கட்டும்…! சுதந்திர தமிழீழம் மலரட்டும்…!! என முழக்கமிட்டு நல்லூரில் உண்ணாநோன்பில் இருந்தான் அந்த மாவீரன். 1987 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள் தமிழ் மக்களின் நியாய மான நேர்மையான ஐந்து அம்சகோரிக்கைகளை முன்வைத்து 15. 09.1987 தொடக்கம் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ்.பிராந்திய அரசியல்துறைப் பொறுப்பாளர் திலீபன் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி பன்னிரண்டு நாட்கள் தொடர்ச்சியாக 265 மணி நேரங்களுக்குப் பிறகு, 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26ஆம் நாள் சனிக்கிழமை காலை 10.58 மணியளவில் தமிழீழ மண்ணிற்கு தன் உயிரை ஈர்ந்து தமிழ் மக்களை மீளாத் துயரில் ஆழ்த்தினான்.

அவருடைய மரணம், தமிழினத்தை உலுக்கியது. அந்த வீரமறவரின் நினைவிடம் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டது. இன்று அதனுடைய நிலை என்ன தெரியுமா?

தியாகி திலீபனின் சமாதியை சுற்றி விளம்பரப் பதாதைகளை அமைத்தும் குப்பைகளைப் போட்டும் அதன் புனிதத்தை கெடுத்துள்ளனர்.

இது ஒவ்வொரு தமிழனுக்கும் மன வேதனை அளிக்கிறது. அகிம்சை வழியில் போராடி உயிர் நீத்த ஒரு தியாகியின் சமாதியை பாதுகாத்து, சுத்தமாக வைத்திருப்பதும் ஒவ்வொரு தமிழனின் கடமை என்று அங்குள்ள தமிழர்கள் குமுறலுடன் சொல்கின்றனர்.

Leave a Response