மலேசியாவில் இலங்கை தூதரைத் தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் – சிங்கள பிரதமர் ரணில் தகவல்

மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்த சிங்கள அமைச்சர் தயா கமகே, பிரதி அமைச்சர் அனோமா கமகே மற்றும் எதிர்க்கட்சி எம்பியான தினேஷ் குணவர்த்தன ஆகியோரை விமானநிலையத்தில் வழியனுப்பி வைக்கச் சென்று திரும்பிய இலங்கை தூதர் இப்ராஹிம் அன்ஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக ஐந்துபேர் கைது செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில்,

மலேசியாவுக்கான இலங்கை தூதர் இப்ராஹிம் அன்ஸார் சீமானின் நாம் தமிழர் கட்சியின் மலேசியக் கிளையினராலே தாக்கப்பட்டுள்ளதாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் இதில் இலங்கைத் தமிழ் மக்கள் எவரும் ஈடுபடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தமிழ் நாட்டில் இயங்கி வரும் நாம் தமிழர் கட்சியின் மலேசியக் கிளையே இந்தச் செயலைப் புரிந்துள்ளதாகவும் இதில் இலங்கையில் இருப்பவர்களோ, இலங்கையில் முன்னர் இருந்தவர்களோ, இலங்கையில் பெற்றோர்களை கொண்டவர்களோ ஈடுபடவில்லை என்றும் அவர் கூறினார்.

போர்க்குற்றங்களுக்காக இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்வதற்காக தீர்மானமொன்றை மலேசியா, ஐ.நா பாதுகாப்பு சபையில் அங்கத்துவத்தை பெற்றுப் பரிந்துபேச வேண்டும் என்றும் அக்கட்சி தமது இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மலேசியாவில் புலிகள் அமைப்பின் செயற்பாடு பற்றி ஆராய்ந்து வந்துள்ளதாக தெரிவித்த பிரதமர் ரணில், கடந்த அரசாங்கமே கே.பி தரப்புடன் மலேசியப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.

மகிந்த ராஜபக்சவுக்கு அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்புப் பிரச்சினை தொடர்பில் அந்த நாட்டு அரசாங்கமே பொறுப்புடையது என்றும் அது தொடர்பில் இலங்கை அரசாங்கம் தனது கடமையையும் புரியும் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை மகிந்தவுக்கு எதிராக புலிக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த ரணில், இரத்தம் சிந்துவதை தவிர்ப்பதற்காக அவ்வாறான செயல்களை மலேசிய அரசாங்கம் அனுமதித்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.

எவ்வாறெனினும் அங்கு நடைபெற்ற அசம்பாவிதம் தொடர்பில் மலேசிய அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுப்பதாக குறிப்பிட்ட பிரதமர், விசாரணை அறிக்கை இலங்கை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் என்றும் கூறினார்.

Leave a Response