
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போது இந்திய அமைதிப்படை அங்கு சென்றது.அப்போது இந்தியாவுக்கு,
வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாகத் திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், ஊர்க்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும், தமிழர் பிரதேசங்களில் புதிதாக காவல் நிலையங்களை திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் ஆகிய ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தியாகதீபம் திலீபன் 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையிலான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ் நல்லூரில் நீராகாரம் கூட அருந்தாமல் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வீர மரணத்தைத் தழுவிக் கொண்டார்.
தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவு நாள் உலகெங்கும் நேற்று கடைபிடிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி, விடுதலைச்சிறுத்தைகள் ஆகிய கட்சியினர் திலீபன் நினைவுநாளைக் கடைபிடிக்கும் வண்னம் நிகழ்ச்சிகள் நடத்தினர்.
தமிழீழத் தாயகத்திலும் திலீபன் நினைவு நாள் எழுச்சியுடன் கடைபிடிக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் மதியம் 12 மணிக்கு ஆரம்பித்ததுடன், பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து,திலீபனின் உருவப்படத்திற்கு பல்கலைக்கழக மாணவர்கள் மலர் மாலை அணிவித்து மலர் தூவியும் வீரவணக்கம் செலுத்தினர்.இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் உணர்வுப்பூர்வமாகக் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில், தியாக தீபத்தின் உயிர் பிரிந்த நேரமான காலை 10.48 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து தியாக தீபத்தின் உருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதேவேளையில், நல்லூர் வடக்கு வீதியில் திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்திலும், நினைவிடத்திற்கு அருகில் உள்ள திலீபனின் ஆவணக் கண்காட்சி கூடத்திலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
இவைதவிர, தமிழீழமெங்கும் திலீபன் நினைவு நாள் நிகழ்ச்சிகள் நடந்தன என்றும் ஏராளமான தமிழ்மக்கள் அதில் கலந்து கொண்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திய நிகழ்வுகள் தமிழீழ மக்களின் தாயகக் கனவு இன்னமும் உயிர்ப்போடு இருப்பதை வெளிப்படுத்துவதாக அங்கிருக்கும் ஊடகத்தினர் தெரிவிக்கிறார்கள்.


