மேதகு பிரபாகரன் பிறந்தநாள் – சீமான் வாழ்த்து

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் 72 ஆவது பிறந்தநாள் இன்று.அதையொட்டி நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை….

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த இனமான தமிழர் எனும் தேசிய இனத்தின்,உயிராகவும்,உணர்வாகவும்,அறிவாகவும்,ஆற்றலாகவும்,முகமாகவும்,முகவரியாகவும் திகழும் நம் தேசியத் தலைவர்,என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 72 ஆவது பிறந்தநாள் வாழ்த்துகளை உலகெங்கும் பரந்து வாழும் எனது உயிருக்கினிய தாய்த்தமிழ்ச் சொந்தங்களோடு பேரன்பும் பெருமிதமும் பொங்கப் பகிர்ந்துகொள்கிறேன்.

மனித இனத்தின் நாகரீகம் என்பது நதிக்கரைகளில் தோன்றியது என்பார்கள்.ஆனால் மனித இனத்தின் வளர்ச்சி சில தனிமனிதர்களின் உள்ள ஊக்கத்திலிருந்துதான் பிறந்திருக்கிறது.அந்த தனிமனிதர்கள்தான் உலகத்தை இயக்கும் உந்துசக்திகளாக திகழ்ந்து உலகத்தை தன்னம்பிக்கையால் சுழல வைத்திருக்கிறார்கள்.இந்த பூமிப்பந்தில் ஆதிக்கங்களும் அடிமைத்தனமும் எப்போதெல்லாம் அதிகாரத்தின் பேரில் உருவாகிறதோ அப்போதெல்லாம் வரலாற்றின் கதாநாயகர்கள் தோன்றி பூமியின் சமநிலையைக் காப்பாற்றியிருக்கிறார்கள்.

தமிழரின் நீண்ட நெடிய வரலாற்றில் எத்தனையோ வீரப்பெருமக்கள் தோன்றி மண்ணைக் காக்க மொழியை மீட்க தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்து நின்றிருக்கிறார்கள்.அப்படி தோன்றிய பெருமக்களில் உயரிய இடத்தில் மங்காப் புகழோடு ஒளி வீசி நம் இதயங்களில் நிறைந்து வாழ்பவர்தான் என் உயிர் அண்ணன்‌ தமிழ்த் தேசியத்தின் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள்.

உலகத்தில் அனைவராலும் கைவிடப்பட்ட தேசிய இனமான தமிழர் என்ற இனத்திற்கு‌ இறுதியாகக் கிடைத்த ஒற்றை நம்பிக்கை நம் தேசியத் தலைவர் அவர்கள்.புராணங்களிலும் இதிகாசங்களிலும் காப்பியங்களிலும் வரலாற்றின் தொடர்ச்சியான பாதைகளிலும் வஞ்சிக்கப்பட்ட இனமான தமிழினத்திற்கு வாராது வந்த மாமணிப்போல் வந்துதித்து அடிமை இருளை விரட்ட செங்கதிர் சூரியன் போல் சுடர்விட்டு ஒளிந்தவர் நம் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள்.

நூலகங்களிலும் வரலாற்றின் காப்பகங்களிலும் உறைந்திருக்கின்ற
இறந்தகாலத்தின் இரத்தம் தோய்ந்த ஏடுகளில் மட்டுமே காணப்படும் சாகச வீரர்கள் உரு கொண்டு நிஜ வாழ்வில் எழுந்து வந்தது போல் அன்னைத் தமிழினத்தின் அடிமை விலங்கொடிக்க ஆயிரமாயிரம் மாவீரர்கள் எழுந்து வந்தார்கள்.அவர்களுக்கெல்லாம் உள்ள சக்தியாய்,உயிர் ஒளியாய்,தெளிவூட்டும் அறிவாய்,வழிநடத்திய ஆற்றலாய் திகழ்ந்தவர் நம் உயிர்த் தலைவர்.

மானுட வரலாறு தோன்றிய காலத்தில் இருந்து ஆயிரமாயிரம் கவிஞர்களும் ஏடெடுத்து எழுதிய எழுத்தாளர்களும் கனவு கண்ட ஒரு இலட்சிய நாடு ஒரு தனி மனிதனால் சமகாலத்தில் உருவாகி தழைத்து நின்றது.தனித்தமிழீழ சோசலிச குடியரசு என்கின்ற அந்தப் பெரும் கனவு நாட்டை ‌ பார்த்துப் பார்த்துச் செதுக்கி இப்படியும் ஒரு நாடு உலகத்தில் உண்டா என்று எல்லோரும் வியக்கும் வகையில் உருவாக்கி எழுப்பிக் காட்டியவர் நம் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள்.

தாய்மண் விடுதலைக்காக சொந்த மக்களையே இராணுவமாகக் கட்டி அறுபடை வீடு கொண்ட முருகன் இனத்தில் பிறந்த மக்கள் ஆறு படை கட்டி நிமிர்ந்த வரலாறு.நள்ளிரவு நேரத்தில் கூட இளம்பெண் ஒருவர் கழுத்து நிறைய நகைகளோடு பாதுகாப்பாக சென்று வீடு திரும்புகிற காந்தி கனவு கண்ட தேசம்.அறம் சார்ந்த வாழ்வியல்.பனைமரம் சார்ந்த பொருளாதாரம்,திரும்பிய திசையெல்லாம் வளம் செழிக்கும் அறிவார்ந்த திட்டங்கள், வெற்றி ஒன்றே இலக்கு என்று துவக்கு ஏந்திப் பாய்ந்த புலிகள் என கனவு நாட்டைக் கட்டியெழுப்பினார் நம் தலைவர்.

அகதி என்றும் அடிமை என்றும் ஓடி ஓடி உலகம் முழுக்க வாழ்கின்ற ஒரு இனத்திற்கு உள்ளங்கை அளவிற்கு நாடாக இருந்தாலும் அது வல்லரசு நாடுகளை விட வலிமையாக கட்டப்பட வேண்டும் என்பதில் கணக்குப் பார்த்து கட்டியெழுப்பி சாதித்துக் காட்டிய சாதனைத் தலைவர் நம் உயிர்த் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள்.

அந்தக் கனவு நாட்டைத்தான் உலகத்தின் வல்லாதிக்க நாடுகள் அனைத்தும் சேர்ந்து கொண்டு சூறையாட நின்றபோது தாய்ப் பருந்து எப்படி தன் குஞ்சுகளைக் காப்பாற்றத் தவித்து நிற்குமோ அதேபோல களத்தில் இறுதிவரை நின்று தன் மண்ணின் விடுதலைக்காக இறுதிவரை போராடி நின்றார் எம் தலைவர்.

அதிகாரத்தால் விலை பேசப்பட்டபோதும்,ஆயுதங்களால் மிரட்டப்பட்ட போதும்,ஆசை வாக்குறுதிகளால் உள்ளத்தை அசைத்துப் பார்த்த போதும் துளியும் சமரசம் இல்லாமல் கொண்ட கொள்கைக்கு நேர்மையாக நின்று உயிரே போனாலும் உள்ளத்தில் நிலைத்த இலட்சியத்திற்கு ஒருபோதும் துரோகம் செய்யாமல் உறுதியாய் நின்று இறுதியாய் சான்றானவர் நம் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள்.

“உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன் ஆனால் அந்த உயிரினும் விட உன்னதமானது எமது உரிமை எமது விடுதலை எமது கௌரவம்” என முழங்கிய சொற்களுக்கு அவரே சாட்சியாக நம் கண் முன்னால் நின்றதுதான் வியப்பினால் அசையா நம் விழிகளில் உறைந்து போன வியப்பான உண்மை.

ஒரு இனத்தின் கண்ணீர் என்பது தனி மனிதனின் துயரமல்ல;அது தலைமுறைகளின் வலி.ஒரு இனத்தின் உரிமை பறிக்கப்படுவது என்பது அதன் நிலம் மட்டுமல்ல,அதன் மொழி,பண்பாடு,வரலாறு,எதிர்காலம் என அனைத்தும் அச்சுறுத்தப்படுவதற்குச் சமம்.அந்த உண்மையைத் தனது வாழ்வின் வழியாக உணர்த்தியவராகத் தமிழர்களின் தேசிய உணர்வில் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் நிலைத்திருக்கிறார்.

எப்படியும் வாழலாம் என்ற எண்ணத்திற்கும்,எதற்காக வாழவேண்டும் என்ற இலட்சியத்திற்கும் இடையிலான வேறுபாட்டை அவரது வாழ்க்கை நமக்கு நினைவூட்டுகிறது.ஒரு மனிதனின் வாழ்வு அவன் அடைந்த வெற்றிகளால் மட்டுமே அளவிடப்படுவதில்லை;அவன் எதற்காக வாழ்ந்தான்,எவற்றைத் தனது வாழ்வின் உயர்ந்த நோக்கமாகக் கொண்டான்,தனது காலத்தின் துயரங்களுக்கு எவ்வாறு எதிர்வினையாற்றினான் என்பவற்றாலும் அளவிடப்படுகிறது.

அந்தவகையில்,தனது வாழ்வையே தமிழர் தேசிய உரிமை,தாயக உணர்வு, மொழி,இன அடையாளம் ஆகியவற்றோடு பின்னிப் பிணைத்துக்கொண்ட தலைவராக நம் உயிர்த் தலைவர் மேதகு வே பிரபாகரன் விளங்குகிறார்.

இனத்தின் துயரங்களுக்கு மத்தியில்,தமிழர்களின் அரசியல் உரிமைகள்,மொழி,கல்வி,சமூக சமத்துவம், பெண்களின் பங்கு,தன்னிறைவு போன்ற கனவுகளை முன்னிறுத்தி தமிழ்த் தேசியக் கனவு தேசத்தைக் கட்டியெழுப்பினார்..

தமிழ்நாடு எனப் பெயர் வைத்து இது தமிங்கில நாடாக தரங்கெட்டுப் போயிருக்கும் நிலை கண்டு வருந்தி வாடி நிற்கையில் பொருளாதாரத் தடைகளும்,போர்ச்சூழலும்,நெருக்கடிகளும் சூழ்ந்திருந்த ஒரு நிலத்தில் அடிப்படைக் கல்வி முதல் உயர்கல்வி வரை தாய்மொழியில் கல்வி,வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தனித்தமிழ்ப் பெயர்கள்,எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்கின்ற உயரிய நிலை என நிலை நிறுத்தி தமிழன் தலை நிமிர்த்தினார் நம் தலைவர்.

சாதியற்ற சமூகத்தை உருவாக்கி மாவீரர் துயிலுமிடங்களில் விதைத்த வீரத்திற்கே முதலிடம் என உருவாக்கி சாதியை சவக்குழியில் புதைத்து வீரத்தை புவியிலே நட்டவர் நம் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன்.

வீட்டிற்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலைகவிழுந்தார் என்கின்ற பாட்டன் பாரதியின் பாடல் வரிகளை நினைவாக்கி ஆணுக்குப் பெண் சமம் அல்ல ஆணும் பெண்ணும் சமம் என்பதை சரித்திரத்தில் நிலைநாட்டி ஆண்களுக்கு நிகராக பெண்களையும் ஆயுதமேந்தி மண்ணின் விடுதலைக்காகப் போரிட வைத்த மகத்தான புரட்சியாளன் நம் தலைவன்.

என்னை நோக்கி வரும் எத்தனையோ அவதூறுகளுக்கு மத்தியில் இதயத்தில் பாயும் விமர்சன அம்புகளால் காயப்படும் காயங்களுக்கு நடுவில் இன்னும் நான் உறுதியோடு நிற்க ஒரே காரணம் அப்பழுக்கற்ற அந்த வீரமனிதனின் வீரமிக்க அந்த விழிகள்தான்.தளர்வுகள் என்னைச் சூழும்போது,தடைகள் என் பாதையை மறைக்கும்போது,நம்பிக்கையின் ஒளி மங்கத் தொடங்கும்போது,என் மனத்தின் ஆழத்தில் எழும் அவரது நினைவே மீண்டும் என்னை எழுந்து நிற்கச் செய்கிறது.

அவரே எனக்கு அண்ணனாக எம் இனத்தின் மன்னனாக இருந்து என்னை வழிநடத்துகிறார்.நான் திரும்பும் திசையெல்லாம் திருஉருவாக நின்று என்னைக் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார்.தோல்விகளாலும் காயங்களாலும் அவதூறுகளும் நான் துவளும் நேரங்களில் எல்லாம் என் உள்ளுக்குள் ஊற்றெடுத்து என்னை ஆற்றுப்படுத்தும் என் வாழ்வியல் துணை என் உயிர் அண்ணன் மேதகு வே பிரபாகரன் அவர்கள்.

என் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் அவரே நிறைந்திருக்கிறார்.அசைக்க முடியா உறுதி கொண்ட எங்களது நிலைப்பாடுகளில் அவரே சத்தியமாய் உண்மையுமாய் மறைந்திருக்கிறார்.

எங்கோ பிறந்த என்னை,என் இனத்தின் மீதான பற்றும்,மொழியின் மீதான காதலும்,தேசிய உணர்வும் ஒரு பெரும் இலட்சியப் பாதையில் அழைத்துச் சென்றிருக்கின்றன.எண்ணற்ற இன்னல்களையும்,துயரங்களையும், அடக்குமுறைகளையும் எதிர்கொண்டபோதும்,என் மனத்தின் உறுதியைச் சிதைக்காமல் என்னைத் தொடர்ந்து இயங்கச் செய்கிற அந்த உணர்வின் மையத்தில் என் தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே பிரபாகரன் மட்டுமே இருக்கிறார்.

தமிழ்த் தேசிய இனத்தின் வரலாறு எழுதப்படும் போதெல்லாம் மேதகு வே பிரபாகரன் என்ற பெயர் மட்டும் தங்க எழுத்துகளால் வைரப்பக்கங்களில் எழுதப்படும்.அவரின்றி நமக்கு இறந்தகாலமோ எதிர்காலமோ நிகழ்காலமோ இல்லை என்பதுதான் நிதர்சனம்.அவரே நமக்கு தத்துவமாக வழிகாட்டியாக வழியாக மாறி நிற்கிறார்.அவர் காட்டிய பாதையில் தமிழர் என்ற தேசியஇனம் தனக்கான இறையாண்மையை,விடுதலையை ஒருநாள் வென்றெடுத்தே தீரும்.

என் உயிரோடு கலந்த அன்புத் தலைவர்,என்னுயிர் அண்ணன்,நம் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 72 ஆவது பிறந்தநாள் வாழ்த்துகளை‌ உலகம் முழுக்கப் பரந்து வாழும் என் தாய்த்தமிழ் உறவுகளோடு மகிழ்ந்து பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழ்த்தாய் வாழ்க!
தலைவர் பிரபாகரன் வாழ்க!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

இவ்வாறு அவர் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

Leave a Response