
அஇபுதமமுக பொதுச்செயலாளர் திருமதி சசிகலா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்…..
கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக வெளியாகியுள்ள தகவல் மிகவும் வெட்கக்கேடான செயலாகும்.
மேலும்,நடைபெற்ற தவறை மறைக்க முயன்றதாகக் கூறப்படும் ஆட்சியாளர்களின் செயல்பாடுகளும் கடும் கண்டனத்திற்குரியவை.இத்தகைய செயல்களை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.தற்போது நீதிமன்றத்தின் மூலம் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியருக்கு முழுமையான பாதுகாப்பும் உரியநீதியும் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இந்த விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து ஆறு மாதங்கள் நிறைவடைந்து,ஏழாவது மாதத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதில் அரசு உரிய கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.
தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு தமிழக காவல்துறையிடம் உள்ளது.காவல்துறையைத் தனது வசம் வைத்துள்ள தமிழக முதல்வருக்கு இதில் கூடுதல் பொறுப்பும்,கடமையும் உள்ளது.மாநிலத்தின் பாதுகாப்பு எந்தச் சூழ்நிலையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு இருப்பதால்,காவல்துறை அவரது நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
எனவே,முதல்வர் மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் செயல்பட்டு,இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆட்சியாளர்கள் தங்களது சொந்தக் கட்சியினரே தவறு செய்திருந்தாலும்,அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கக்கூடாது.புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில்,தனது கவனத்திற்கு வரும் எந்தவொரு தவறாக இருந்தாலும்,அதில் தனது கட்சியினர் சம்பந்தப்பட்டிருந்தாலும் நடவடிக்கை எடுக்க ஒருபோதும் தயங்கியதில்லை.தவறு செய்தவர்கள் அமைச்சர்களாக இருந்தாலும் சரி,கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருந்தாலும் சரி,அவர்களை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுப்பார்.அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில் தமிழகம் அமைதிப்பூங்காவாகத் திகழ்ந்தது.ஆனால்,அம்மா அவர்களின் மறைவிற்குப் பிறகு தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை தொடர்ந்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது.
ஒரு மாவட்ட ஆட்சியர்,தனது மாவட்டத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளை உறுதி செய்வது, மாவட்ட மக்களின் நலனையும்,பாதுகாப்பையும் பேணுவது உள்ளிட்ட பல்வேறு இன்றியமையாத பணிகளை மேற்கொள்கிறார்.இத்தகைய பொறுப்பில் இருக்கும் ஓர் உயர் அரசு அதிகாரிக்கே பாதுகாப்பற்ற சூழல் ஏற்படுவது மிகவும் வேதனையளிக்கிறது.
குறிப்பாக,கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஒரு பெண் என்ற நிலையில்,பல்வேறு சவால்களைக் கடந்து தனது நிர்வாகப்பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.
இந்நிலையில்,தனக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அவர் முன்கூட்டியே அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருந்தும்,உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு மிகவும் கண்டனத்திற்குரியது.
ஒரு அரசு அதிகாரி பாதிக்கப்பட்டது தெரிந்தவுடன்,உடனே நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும்.ஆனால் நீதிமன்றம் அறிவுறுத்திய பிறகுதான் தமிழக அரசு தற்போது வழக்கு தொடுத்து இருக்கிறது. இது ஒரு நல்ல அரசுக்கு அழகல்ல.
ஒரு நல்ல அரசு என்பது தனது குடிமக்களைப் பாதுகாக்கும் அரசாக இருக்கவேண்டும்.அரசு நிர்வாகம் முறையாக இயங்குவதற்கு முக்கியப் பங்காற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் அரசாக இருக்கவேண்டும். குறிப்பாக,மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்பும்,கடமையும் உள்ளது. அந்தப் பொறுப்பை உணராமல் செயல்படுபவர்களால் எவ்வாறு மக்களுக்கு நல்லாட்சி வழங்கமுடியும் என்ற கேள்வி எழுகிறது.
எனவே,கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய விசாரணை நடத்தி,சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.அதோடுமட்டுமல்ல இந்த நபர் அவரதுகட்சியிலிருந்தே நீக்கப்படவேண்டும்.பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியருக்கு உரிய பாதுகாப்பையும், நீதியையும் தமிழக அரசு உறுதி செய்யவேண்டும்.
தமிழக முதல்வர் தனது பொறுப்பை உணர்ந்து செயல்படுவதுடன்,மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எவ்விதத் தயக்கமுமின்றி விரைந்து மேற்கொள்ள வேண்டும்.அப்போதுதான் தமிழகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் உணர்வார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


