
தமிழ்நாட்டில் தேசிய சனநாயகக் கூட்டணியில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இந்தல் கூட்டணியில் யார் முதலமைச்சர் வேட்பாளர்? என்ற குழப்பம் நீடித்து வருகின்றது. எடப்பாடி நான்தான் முதலமைச்சர் வேட்பாளர் எனக் கூறி வருகிறார். ஆனால், பாஜக தலைமை அதை ஏற்கவில்லை. எடப்பாடியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றால் கூட்டணிக்கு வர மாட்டேன் என்று டிடிவி.தினகரன் மிரட்டி வருகிறார்.
இந்தச் சூழலில், அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று பிரிந்து சென்றவர்கள், அதிமுகவில் உள்ள மூத்த நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இதற்காக பாஜகவின் தயவை அதிமுக தலைவர்கள் நாடி உள்ளனர்.
கடந்த தேர்தலில் பாஜகவால் தோற்றோம் என பேசிய சி.வி.சண்முகம், இப்போது எம்ஜிஆர், ஜெயலலிதாவை மறந்து மோடியை தூக்கிப் பிடித்து வருகிறார். அதிமுக ஒருங்கிணைய வேண்டுமென்று செங்கோட்டையனுடன் சென்று எடப்பாடியிடம் வலியுறுத்திய சி.வி.சண்முகம், தற்போது நீ யாருடா கட்சியில் சேர்க்கச் சொல்ல என்று ஓபிஎஸ் மீது ஒருமையில் கடுமையாக விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓபிஎஸுக்கு ஆதரவாக தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் செயல்பாடு உள்ள நிலையில், சி.வி.சண்முகம் நேர் எதிரான கருத்துகளை வெளியிட்டதால், அவர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக பேசியிருப்பதாகத் தகவல் பரவின.
இந்தச் சூழலில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மொட்டையன் தெருவில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இல்லத்திற்கு நேற்று 12:30 மணியளவில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திடீரென சென்றார். அங்கு சி.வி.சண்முகத்துடன், அரை மணிநேரம் தனிமையில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் வெளியே வந்த நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னையில் இருந்து பெரம்பலூரில் நடைபெறும் பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றபோது வழியில் தம்பி சி.வி.சண்முகத்தைச் சந்தித்தேன். இருவரும் அண்ணன்- தம்பி போல் அடிக்கடி சந்திப்போம். ஒருதாய் வீட்டுப் பிள்ளைகள். கூட்டணியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நாங்கள் சந்திப்போம் என்றார்.
வெளியில் இப்படிச் சொன்னாலும் ஓபிஎஸ்ஸை தனிமைப்படுத்தும் முயற்சியில் நயினார் நாகேந்திரன் இறங்கியிருக்கிறார் என்றும் அதற்கு ஆதரவாகப் பேசிய சி.வி.சண்முகத்துக்கு நன்றி தெரிவித்துவிட்டு அடுத்து என்ன செய்யலாம்? என்று ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.


