இந்திய அமைதி காக்கும் படை (IPKF-Indian Peace Keeping Force) 1987 இல் இலங்கை இந்தியா ஒப்பந்தப்படி இலங்கையில் அமைதியை ஏற்படுத்த இந்தியாவினால் அனுப்பப்பட்ட இராணுவம்.
இந்திய அமைதி காக்கும் படை இலங்கையில் 1987 இன் பிற்பகுதியில் தமது பணிகளை ஆரம்பித்தது. இருதரப்புக்குமிடையே அமைதி ஏற்படுத்துகிறோம் என்று சொல்லிப்போன இந்திய இராணுவம், சிங்கள அரசோடு சேர்ந்துகொண்டு தமிழர்களுக்கு எதிராகச் செயல்பட்டது. பின்னர் மார்ச் 31, 1990 அப்போதைய இலங்கை அதிபர் பிரேமதாசவினால் திருப்பி அனுப்பப்பட்டது.
அமைதிப்படை அங்கிருந்த காலகட்டத்தில், ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கினார் மருத்துவ மாணவர் திலீபன்.
1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள் அவர் உண்ணாவிரதம் தொடங்கினார்.
செப்டெம்பர் 15-இல் தொடங்கிய திலீபன் அண்ணாவின் உண்ணாவிரதம், பன்னிரண்டாவது நாளன்று,(செப்டம்பர் 26) காந்தியும் புத்தரும் பிறந்த இந்தியாவின் பெருங்’கருணை’யினால் முடிவுக்கு வந்தது. வற்றியுலர்ந்து சருகான உடலை விட்டுப் பிரிந்தது அவரது உயிர்.
திலீபனின் 37 ஆவது நினைவு நாளை முன்னிட்டு கவிஞர் தமிழ்நதியின் பதிவு…
வரலாற்றின் முக்கியமான தருணங்கள் நிகழுமிடங்களில் சாட்சியாக இருந்துவிட நேர்வது வரமா சாபமா என்றெனக்குத் தெரியவில்லை.
செப்டெம்பர் 26, 1987. அன்றைய காலையும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னான அநேக காலைகளைப் போல இலேசான குளிரோடு புலர்ந்தது. நாங்கள் அப்போது திருநெல்வேலிக்கு அண்மையிலுள்ள பழம் றோட்டில் வாடகை வீடொன்றில் குடியிருந்தோம். தாமதமாக எழுந்து காலை உணவை முடித்துவிட்டு ‘போர்டிகோ’வில் அமர்ந்திருந்தேன்.
ஒலிபெருக்கி வழியாக காற்று ஏந்திவந்த ஓசைகள் மனதைக் குழப்பின. கூக்குரலா? அழுகையா? கூட்டமொன்று ஒரே குரலில் பேசுவதான ஓசை. தற்செயலாக அங்கு வந்த அம்மா குழப்பத்தோடு என்னைப் பார்த்தார்.
அவருடைய கண்களில் ஒரு கேள்வி. “ஐயோ…”பதறினார். அடுத்து என்ன விபரீதமெல்லாம் நடக்கப்போகிறதோ என்ற அச்சத்தை அந்த அவலக்குரல் பிரதிபலித்தது.
நான் எழுந்தேன். தெருவிலிறங்கினேன். “செருப்பைப் போட்டுக்கொண்டு….”அம்மாவின் குரலைப் பின்னிறுத்தி, நல்லூர்க் கோயிலை நோக்கி ஓடத்தொடங்கினேன். ‘திலீபன் அண்ணா… திலீபன் அண்ணா’என்று நெஞ்சு பதகளிக்கிறது.
பார்த்தால், நானொரு கூட்டத்தோடு சேர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறேன். சிலர் சைக்கிளில் ஏறிப் பறக்கிறார்கள். தனிப்பட்ட வாகனங்களும் இயக்க வாகனங்களும் தெருவைக் கீறி விரைகின்றன. தெருவெல்லாம் சனவெள்ளம். எது நடந்துவிடக்கூடாதென தெய்வங்களிடமெல்லாம் கையேந்தி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தோமோ, அது நிகழ்ந்தே விட்டது. திலீபன் அண்ணா மறைந்துவிட்டார்!
அந்தக் காட்சியை மறக்கவேமுடியாது. அங்கிருந்த அத்தனை பேருடைய கண்களிலும் கண்ணீர்! வெஞ்சினம்! துரோகிக்கப்பட்டதான சீற்றம்! அழுகையொலி கோயில் வளாகத்தை நிறைக்கிறது. சில பெண்கள் நெஞ்சிலடித்துக் கதறுகிறார்கள். நாங்கள் மீண்டும் ஒருதடவை கைவிடப்பட்டவர்களானோம்.
இந்தியா எங்களை ஏமாற்றியது. ‘இதோ… இதோ…’என்று நம்பவைத்துக் கழுத்தறுத்தது. திலீபன் அண்ணாவை பன்னிரண்டு நாட்கள் பசியிருக்க வைத்து, துளித்துளியாக உயிரைக் குடித்து முடித்தது. அதுவரை உள்ளொடுங்கியிருந்த கோரைப் பற்களை வெளியே நீட்டி தன் சுயரூபத்தைக் காட்டியது. நியாயமற்ற போரை எங்கள் மீது ஏவியது. கௌரவமான வாழ்வைச் சிதைத்து அகதிகளாக்கி ஊரூராக அலையவைத்தது. பசியை எங்கள் வயிறுகளில் திணித்தது. குழந்தைகளையும் முதியவர்களையும்கூடக் கொன்றது. அகதி முகாம்களுக்குத் தூக்கிச் செல்ல இயலாது வீடுகளில் தனியே விடப்பட்ட முதியவர்களை, சதை வற்றிய எலும்புக்கூடுகளாக, பின்னாட்களில் வீடு திரும்பிய நாங்கள் கண்டோம்.
வல்லாதிக்க சக்திகள் எங்களுக்கெதிராகக் கைகோர்த்து எங்களை வீழ்த்தின என்பது உண்மைதான். அதை மறுப்பதற்கில்லை. ஆனால், திலீபன் அண்ணா போன்ற போராளிகளது தியாகத்தால் எம்மினம் இன்னமும் தலைநிமிர்ந்தேயுள்ளது. வீழ்ச்சியடைந்தோமேயன்றி நாங்கள் தோல்வியடையவில்லை என்பதை எந்நாளும் நினைவிற்கொள்வோம்.