
செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் நடந்த நடிகர் விஜய்யின் பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான பின்பு அக்கட்சி செயலிழந்து இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அதன்பின், இந்த வழக்கை மத்திய குற்றப் புலனாய்வுத்துறை விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்பு அக்கட்சியில் சில அசைவுகள் நடக்கின்றன.
இந்நிலையில் அக்கட்சியில் விஜய்க்கு அடுத்தபடியாக மக்களுக்குத் தெரிந்த முகமாக இருப்பவர் அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த்.
இப்போது அவரை அப்பொறுப்பிலிருந்து நீக்கிவிடும் முடிவை விஜய் எடுத்திருப்பதாக அக்கட்சி வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.
அவருக்குப் பதிலாக அக்கட்சியில் கொள்கை பரப்புப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருக்கும் முன்னாள் இந்திய வருவாய் பணி அதிகாரி அருண்ராஜ்,இதுவரை புஸ்ஸி ஆனந்த் கவனித்து வந்த பொறுப்புகளைக் கவனித்துக் கொள்வார் என்கிற தகவலும் உலவிக் கொண்டிருக்கிறது.
சுமார் பத்தாண்டுகளாக விஜய் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தவர் புஸ்ஸி ஆனந்த். விஜய்யின் அப்பா இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரனையே விஜய்யிடமிருந்து பிரித்தவர் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டவர்.அப்படிப்பட்டவரை இப்போது டம்மியாக்கிவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.
ஏனெனில் கரூர் கொடுநேர்ச்சி நிகழ்விலிருந்து விஜய்யைக் காப்பாற்ற ஒன்றியத்தை ஆளும் பாஜக தலைமையிடம் முற்றாகச் சரணடைந்திருக்கிறார் விஜய்.அவர் சார்பாக தில்லியில் உள்ளோரிடம் தொடர்பில் இருப்பவர் அருண்ராஜ் தான் என்றும் சொல்கிறார்கள்.
இதனால், கட்சியிலும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என பாஜக தரப்பிலிருந்து சொல்லப்பட்டதாகவும் அதை ஏற்றுக்கொண்டு புஸ்ஸி ஆனந்த்தை விலக்கி வைத்துவிட்டு அருண்ராஜுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முடிவை விஜய் எடுத்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
இப்போது கட்சி சார்ந்த முக்கிய முடிவுகளை அருண்ராஜ் தான் எடுக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
இவை எல்லாமே அதிகாரப்பூர்வமற்ற முறையில் உலவிக் கொண்டிருக்கும் தகவல்கள்தாம்.இதுகுறித்து இதுவரை விஜய் கட்சியைச் சேர்ந்த யாரும் எந்தக் கருத்தையும் அதிகாரப்பூர்வமாகச் சொல்லவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.


