
இவ்வாண்டு தீபாவளி நாளையொட்டி அக்டோபர் 17 ஆம் தேதி வெளியான படம் பைசன்.மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள இந்தப்படம் ஒரு கபடி விளையாட்டு வீரர் துறை சார்ந்த போட்டிகளைத் தாண்டி சமுதாய ரீதியாகவும் சாதி ரீதியாகவும் எவ்வாறெல்லாம் தடைகளை எதிர்கொள்கிறார் என்பதை அந்தப்படம் பேசியிருந்தது.
அந்தப்படத்தைப் பார்த்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை,படத்தைப் பாராட்டி நீண்ட பதிவை இட்டுள்ளார்.
அதில்,
அன்புச் சகோதரர் திரு மாரி செல்வராஜ் அவர்கள் இயக்கியுள்ள, பைசன் – காளமாடன் திரைப்படத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு அற்புதமான, உணர்வுப் பூர்வமான திரைப்படத்தைத் தந்திருக்கிறார். அவருக்கும், படக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு கிராமத்து இளைஞன், தனது இலட்சியத்தை அடைய எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சந்திக்கும் சவால்கள், சமூகம் சார்ந்த சிக்கல்கள் என, அனைத்தையும் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார் சகோதரர் திரு மாரிசெல்வராஜ் அவர்கள். திரைப்படத்தின் பல காட்சிகளில், உணர்வுப் பூர்வமாக என்னைப் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடிந்தது.
அர்ஜுனா விருது வென்ற இந்தியக் கபடி வீரர் திரு.மணத்தி கணேசன் அவர்களது வாழ்க்கையை, மிக அற்புதமாக திரையில் தந்திருக்கிறார் சகோதரர் திரு.மாரி செல்வராஜ் அவர்கள். அவரது சாதனை அத்தனை எளிதாகக் கிடைத்து விடவில்லை. சாதிக்க விரும்பும் இளைஞனுக்கு, சமூகம் பல வழிகளில் வேலியிட்டாலும், அந்த வேலியின் உயரத்தைத் தாண்டி வளர வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டான நம் மண்ணைச் சேர்ந்த நாயகன் திரு.மணத்தி கணேசன் அவர்கள் வரலாற்றை, மிக அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். மேலும், சமூக ஒற்றுமை வேண்டும் என்ற தனது ஆழ்ந்த விருப்பத்தையும், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வெளிப்படுத்தியிருக்கிறார்.
கதாநாயகன் திரு. துருவ்,இந்தத் திரைப்படத்துக்காக தன்னையே அர்ப்பணித்திருப்பதை உணர முடிகிறது. அண்ணன் திரு.பசுபதி அவர்கள், திரு.லால் அவர்கள் ஆகியோரின் நடிப்புத் திறனைக் குறித்து நான் புதியதாக எதுவும் சொல்லத் தேவையில்லை. அனைத்து நடிகர்களுமே தங்கள் அற்புதமான திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அனைவருக்கும் பாராட்டுகள்.
சகோதரர் திரு மாரி செல்வராஜ் அவர்கள், மேலும் பலப்பல அற்புதமான திரைப்படங்களைத் தர வேண்டும். மக்களை ஒன்றிணைக்கவும், ஏற்றத்தாழ்வற்ற சமூகம் அமையவும், சமூகம் சார்ந்த அவரது பயணம் சிறப்பாகத் தொடர வேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்தப் பாராட்டுரையின் கடைசியில், மக்களை ஒன்றிணைக்கவும், ஏற்றத்தாழ்வற்ற சமூகம் அமையவும், சமூகம் சார்ந்த அவரது பயணம் சிறப்பாகத் தொடர வேண்டும் என்று வாழ்த்தியிருக்கிறார்.
ஏற்றத்தாழ்வை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட மனுநீதியை தம்முடைய கொள்கையாகக் கொண்ட பாஜகவில் இருந்து கொண்டு அக்கட்சியின் கொள்கைக்கு நேரெதிராக ஏற்றத் தாழ்வற்ற சமூகம் அமையப் பாடுபடுவருக்கு தாமாக முன்வந்து வாழ்த்துச் சொல்லியிருக்கிறார். இதனால், அண்ணாமலை அணி மாறுகிறாரா? அதாவது பாஜகவிலிருந்து விலகவிருக்கிறாரா? என்கிற கேள்விகள் அரசியலரங்கில் பரவலாக எழுந்து பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.


