தில்லி குண்டுவெடிப்பு நிகழ்த்தியதாகச் சொல்லப்படும் உமர் நபி அமைதிவிரும்பி – மைத்துனி தகவல்

தலைநகர் டெல்லியில் உயர் பாதுகாப்பு கொண்ட செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் மாலை 6.52 மணி அளவில் போக்குவரத்துசமிக்ஞையில் நின்ற மகிழுந்து திடீரென வெடித்துச் சிதறியது. பரபரப்பான மக்கள் நடமாட்டம் மிகுந்த அந்த இடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 8 பேர் பலியாகினர். 20 க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் 4 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தால் பலி எண்ணிக்கை 12 ஆக நேற்று அதிகரித்தது.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து டெல்லி காவல்துறையினருடன் தேசிய புலனாய்வு முகமை, தேசிய பாதுகாப்புப் படை, உளவுத்துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகள் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. செங்கோட்டை குண்டுவெடிப்புக்கு முன்பாக, 2,900 கிலோ வெடி பொருட்கள் மற்றும் பயங்கர ஆயுதங்களைப் பதுக்கி வைத்ததாக 3 மருத்துவர்கள் உட்பட 8 பேர் கொண்ட குழுவை அரியானா, உபி, காஷ்மீர் காவல்துறையினர் இணைந்து கைது செய்திருந்தனர். அந்த கைது நடவடிக்கை நடந்த சிறிது நேரத்தில் செங்கோட்டை மகிழுந்து குண்டுவெடிப்பு நடந்ததால் இரண்டுக்கும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

அதே சமயம், குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஹூண்டாய் ஐ20 மகிழுந்தை யார் ஓட்டி வந்தது? யாருடைய மகிழுந்து அது? என்பது குறித்தும் கண்காணிப்புக் கருவிப் பதிவுகளை வைத்து காவல்துறையினர் விசாரித்தனர்.

அதில்,மகிழுந்தை ஓட்டி வந்தது காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் லெத்போராவைச் சேர்ந்த மருத்துவர் உமர் நபி என்பது தெரியவந்தது. இவர் கறுப்பு நிற முகத்திரை அணிந்து மகிழுந்து ஓட்டியது, சுங்கச்சாவடி உள்ளிட்ட இடங்களில் உள்ள பதிவுகளில் இருந்து உறுதி செய்யப்பட்டது. இந்த உமர் நபிக்கும், தீவிரவாத மருத்துவர் குழுவுக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது.

கடந்த அக்டோபர் மாதம் காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது தொடர்பாக, அரியானாவின் பரிதாபாத்தில் உள்ள அல்பலா பல்கலைக்கழக பேராசிரியர் முசம்மில் கனாயியை காவல்துறையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர் தங்கியிருந்த வாடகை வீட்டில் இருந்து 360 கிலோ வெடிபொருட்கள், வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இவர் காஷ்மீரை சேர்ந்தவர். முசும்மில் அளித்த தகவலின் அடிப்படையில் லக்னோவை சேர்ந்த பெண் மருத்துவர் ஷாஹீன் சயீத் மற்றும் காஷ்மீரை சேர்ந்த மற்றொரு மருத்துவர் ஆதில் அகமது ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் ஜெய்ஷ் இ முகமது மற்றும் ஐஎஸ் அமைப்பின் இந்திய கிளையான அன்சார் கஸ்வத் உல் ஹிந்த் அமைப்பிற்காக வேலை செய்தது தெரியவந்தது. இதில், ஷாஹீன் சயீத் இந்தியாவில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் பெண்கள் படையை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்டவர். இவர்கள் இந்தியாவில் பயங்கர நாசவேலைகள் செய்ய திட்டமிட்டிருந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தீவிரவாத மருத்துவர்கள் குழுவில் ஒருவர் தான் உமர் நபி. இவரும் அரியானாவின் அல் பலா பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர்.

தனது கூட்டாளிகள் சிக்கிக் கொண்டதால், தானும் மாட்டிக் கொள்வோம் என்ற அச்சத்தில் உமர் நபி பரிதாபாத்தில் இருந்து ஐ20 மகிழுந்தில் நேற்று முன்தினம் காலை டெல்லிக்கு சென்றுள்ளார். பல்வேறு இடங்களுக்கு சென்ற அவர் இறுதியில் செங்கோட்டை அருகே உள்ள நிறுத்தத்தில் 3 மணி நேரம் மகிழுந்தை நிறுத்தி உள்ளார். பின்னர், மகிழுந்தை அவர் ஓட்டிச் சென்ற போது செங்கோட்டை அருகே போக்குவரத்துசமிக்ஞையில் மகிழுந்து வெடித்துச் சிதறியிருக்கிறது.மகிழுந்தில் அதிகளவு அம்மோனியம் நைட்ரேட்டை உமர் அலி எடுத்துச் சென்றிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து சமிக்ஞையில் மகிழுந்து நிறுத்தப்பட்ட போது அதில் இருந்த அம்மோனியம் நைட்ரேட் எதிர்பாராத விதமாக வெடித்திருக்கலாம் அல்லது உமர் அலி தற்கொலை தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை என அதிகாரிகள் கூறி உள்ளனர்.

இதனால், குண்டுவெடிப்பில் பலியான 12 பேரில் உமர் நபியும் ஒருவராக இருக்கலாம் என்பதால், வெடித்துச் சிதறிய மகிழுந்தில் கிடைத்த உடல் பாகங்களை டிஎன்ஏ சோதனை செய்து, புல்வாமாவில் உள்ள உமர் நபியின் தாயாரிடம் டிஎன்ஏ சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது.

குண்டுவெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட மகிழுந்து மொத்தம் 7 முறை பல்வேறு நபர்களிடம் விற்கப்பட்டுள்ளது. கடைசியாக புல்வாமாவை சேர்ந்த தாரிக் என்பவர் உமர் நபிக்கு விற்றுள்ளார். இதனால் தாரிக்கை காவல்துறையினர் பிடித்து விசாரிக்கின்றனர். பல்வேறு போலி ஆவணங்கள் மூலம் மகிழுந்து கைமாறியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அல் பலா பல்கலைக்கழகத்தில் நேற்று விசாரணை நடத்திய காவல்துறையினர் 50க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மகிழுந்தை ஓட்டியதாக நம்பப்படும் உமர்நபியின் மைத்துனி முசாமில் கூறுகையில், ‘‘உமர் சிறு வயதில் இருந்தே அமைதியாக இருப்பான். தனிமை விரும்பி. படிப்பு, தனது வேலையில் மட்டுமே கவனம் செலுத்துவான். பரிதாபாத்தில் ஒரு கல்லூரியில் பேராசிரியாக இருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை தொலைபேசி செய்து பேசும்போது கூட தேர்வுக்காக அதிக வேலை இருப்பதாகவும், 3 நாட்களுக்குப் பிறகு வீட்டிற்கு வருவதாகவும் கூறியிருந்தார். குடும்பத்தின் ஒரே நம்பிக்கையாக இருந்தவர் உமர்’’ என்றார். உமர் நபியின் தந்தை குலாம்நபி பட்டை புல்வாமா காவல்துறையினர் நேற்று அழைத்துச் சென்று விசாரணை நடத்தி உள்ளனர்.

விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

Leave a Response