
தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு அந்தப் பொறுப்பில் நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.
அதிமுக ஒருங்கிணைப்பு மற்றும் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தைகள் ஆகியனவற்றில் அண்ணாமலையைவிட நைனார் சிறப்பாகச் செயல்படுவார் என்று நம்பித்தான் அவரை இந்தப் பொறுப்பில் நியமித்தார்கள்.
ஆனால் அவரோ, அதிமுகவில் இருந்தபோது நிகழ்ந்தவற்றிற்குப் பழிவாங்கும் விதமாக முழுக்க எடப்பாடி பழனிச்சாமியுடன் சேர்ந்து கொண்டு சசிகலா, ஓபிஎஸ், டிடிவி ஆகியோருக்கு எதிராகச் செயல்படத் தொடங்கிவிட்டார்.
இதனால் தில்லி பாஜக தலைமை நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகளில் திருப்தியில்லாமல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அண்ணாமலை இருந்தபோது பாஜக எப்போதும் பேசுபொருளாக இருந்ததாகவும், நயினாரின் வருகைக்குப் பின்னர் கட்சி இருக்கும் இடமே தெரியவில்லை என்றும் பேச்சுகள் எழுந்துள்ளன. அண்ணாமலையின் செயல்பாடுகளால் ஏற்பட்ட தாக்கம் காரணமாகவே, மக்களவைத் தேர்தலில் பாஜக வாக்கு விழுக்காடு உயர்ந்ததாகவும் மேலிடத்துக்கு ஒரு தரப்பு தகவல் அனுப்பியுள்ளது.
இதனையடுத்து, நயினார் நாகேந்திரனை வைத்தே சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளலாமா? அல்லது மீண்டும் அண்ணாமலையைப் பொறுப்புக்குக் கொண்டுவரலாமா? என்ற ஆலோசனையிலும் தில்லி தலைமை ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
அண்ணாமலை தடாலடியாகப் பேசுபவர், நயினார் நிதானமாகப் பேசுபவர்.தில்லி தலைமை எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டே நயினாரை தலைமைப் பொறுப்புக்குக் கொண்டுவந்துள்ளது. எனவே, அவரை உடனடியாக மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. அதே நேரத்தில், அண்ணாமலைக்கு முக்கியத்துவம் கொடுக்க மேலிடம் விரும்பினால், தேர்தல் நேரத்தில் அவருக்கு வேறு முக்கிய பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளது என்று பாஜக வட்டாரங்கள் சொல்கின்றன.
ஆனாலும், பீகார் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் தமிழ்நாடு அரசியலில் தில்லி பாஜக தலைமை தீவிர கவனம் செலுத்தும் அப்போது தமிழ்நாடு பாஜகவிலும் பல அதிரடி மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


