
பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக, 121 தொகுதிகளில் நவம்பர் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அங்கு மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 3.75 கோடி. முதல் கட்டத் தேர்தலில் 65.08 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில் மீதம் உள்ள 122 தொகுதிகளில் நேற்று இரண்டாவது கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற தேர்தலில் இதுவரை இல்லாத அளவில் மிக அதிகமாக 68.52 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.
இந்த வாக்குகள் அனைத்தும் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு எண்ணப்படும். அப்போது பீகாரில் புதிய ஆட்சி அமைப்பது யார் என்பது தெரிந்து விடும்.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்…
1. ஜேவிசி கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 135-150 இடங்கள் பெறுமெனவும் காங்கிரசு கூட்டணி 88-103 இடங்கள் பெறுமெனவும் மற்றவர்கள் 3-6 இடங்கள் பெறுவார்கள் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
2. மேட்ரிஸ் கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 147-167 இடங்கள் பெறுமெனவும் காங்கிரசு கூட்டணி 70-90 இடங்கள் பெறுமெனவும் மற்றவர்கள் 2-10 இடங்கள் பெறுவார்கள் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
3. பீப்பிள் இன்சைட் கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 133-148 இடங்கள் பெறுமெனவும் காங்கிரசு கூட்டணி 87-102 இடங்கள் பெறுமென்றும் மற்றவர்கள் 3-6 இடங்கள் பெறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
4. பீப்பிள் பல்ஸ் கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 133-159 இடங்கள் பெறுமென்றும் காங்கிரசு கூட்டணி 75-101 இடங்கள் பெறுமென்றும் மற்றவர்கள் 2-13 இடங்கள் பெறுவார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
5. டைனிக் பாஸ்கர் கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 145-160 இடங்கள் பெறுமென்றும் காங்கிரசு கூட்டணி 73-91 இடங்கள் பெறுமென்றும் மற்றவர்கள் 5-10 இடங்கள் பெறுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
6. பிஎம்ஏஆர்கியூ கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணிக்கு 142-162 இடங்கள் கிடைக்குமென்றும் காங்கிரசு கூட்டணிக்கு 80-98 இடங்கள் கிடைக்குமென்றும் மற்றவர்கள் 1-7 பெறுவார்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.


