பீகார் முதல்கட்டத் தேர்தலில் வாக்குப்பதிவு அதிகரிப்பு – ஆளும்கட்சி அச்சம்

பீகாரில் 243 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் முதல்கட்டமாக 121 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் 122 பெண்கள் உட்பட 1,314 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 48, ஐக்கிய ஜனதா தளம் 57, எல்ஜேபி (ஆர்)13, ஆர்எல்எம் 2, எச்ஏஎம் 1 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

எதிர்க்கட்சிக் கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் 72, காங்கிரசு 24, விஐபி 6, கம்யூனிஸ்ட் கட்சிகள் 22 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

இரு அணிகளைத் தவிர்த்து தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன.

பீகார் துணை முதலமைச்சர்கள் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா, மெகா கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ், லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் மற்றும் 16 அமைச்சர்கள் வேட்பாளர்களாக களத்தில் இருந்தனர்.

முதல்கட்டத் தேர்தல் நடைபெற்ற 121 தொகுதிகளில் மொத்தம் 3.75 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்காக 45,341 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.

நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தலைநகர் பாட்னா அடுத்த பக்தியார்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் முதலமைச்சர் நிதிஷ் குமார் வாக்களித்தார். ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சித் தலைவர் லாலு பிரசாத் தனது மனைவி ரப்ரி தேவி உள்ளிட்ட குடும்பத்தினருடன் சென்று பாட்னாவின் கால்நடை மருத்துவக் கல்லூரி வாக்குச் சாவடியில் வாக்களித்தார். ஆர்ஜேடி மூத்த தலைவரும், மெகா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் தனது மனைவி ராஜஸ்ரீ உடன் சென்று வாக்களித்தார்.

லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப், ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இருந்து விலகிஜன் சக்தி ஜனதா தளம் என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். பாட்னாவில் வாக்களித்த அவர், ‘‘எனக்கு முதல்வர் பதவி கிடைத்தால் நிச்சயம் ஏற்றுக் கொள்வேன்’’ என்றார். பிஹார் தேர்தலில் லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப்பும், இளைய மகன் தேஜஸ்வி யாதவும் எதிரும் புதிருமாக போட்டியிடுகின்றனர். ‘‘எனது இரு மகன்களும் தேர்தலில் வெற்றிவாகை சூடுவார்கள்” என்று லாலுவின் மனைவி ரப்ரி தேவி கூறினார்.

ஒன்றிய அமைச்சரும், எல்ஜேபி (ஆர்) கட்சித் தலைவருமான சிராக் பாஸ்வான், ககாரியா நகரில் வாக்களித்தார். ‘‘பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும். மெகா கூட்டணி தோல்வியைத் தழுவும்’’ என்று அவர் கூறினார்.

பெரும்பாலான பகுதிகளில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நீடித்தது. பதற்றமான 56 வாக்குச்சாவடிகளில் மாலை 5 மணிக்கே வாக்குப்பதிவு முடிந்தது. 400 வாக்குச்சாவடிகளில் இரவைக் கடந்தும் வாக்குப்பதிவு நீடித்தது.

இரவு 8 மணி நிலவரப்படி, 64.46 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. 2020 இல் முதல் கட்டத் தேர்தலின்போது 56.9 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. அதைவிட தற்போது 7.56 விழுக்காடு வாக்குகள் அதிகமாகப் பதிவாகியுள்ளன.

வாக்குப்பதிவு அதிகரித்தால் அது எதிர்க்கட்சிக்குப் பலம் என்பது பொதுவான கருத்து.இப்போது வாக்குப்பதிவு அதிகரித்திருப்பதால் எதிர்க்கட்சிக் கூட்டணி மகிழ்ச்சியாக இருக்கிறது.தற்போது ஆளும் பாஜக கூட்டணி அச்சத்தில் இருக்கிறது.

நவம்பர் 11 ஆம் தேதி இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 14 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Leave a Response