
தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் பெரும்பான்மை சமூகத்தினரான கொங்கு வேளாள கவுண்டர்கள் வாக்குகளைக் குறி வைத்து தொடங்கப்பட்ட அமைப்பு தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை.அதன் தலைவராக தனியரசு இருக்கிறார்.
இரண்டு தேர்தல்ளில் அதிமுக கூட்டணியில் இருந்த அவர், சென்னை அறிவாலயத்தில் நேற்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.
அப்போது சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட தனியரசு விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பச்சைக்கொடி காட்டிவிட்டதாகத் தெரிகிறது.
முதலமைச்சர் சந்திப்புக்குப் பின் தனியரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது….
திமுகவின் நான்கரை ஆண்டுகால ஆட்சியின் சிறப்பை உணர்ந்து முதலமைச்சரை நேரில் சந்தித்து பாராட்டுகளைத் தெரிவித்தேன். குறிப்பாக பாஜகவுக்கு எதிராக ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் முதன்மை அரசியல் இயக்கமாக திமுக இருக்கிறது. திமுக கூட்டணியில் இல்லாவிட்டாலும் இந்த ஆட்சியின் திட்டங்களை ஆதரித்து வருகிறோம். தொடர்ந்து 2026 சட்டப்பேரவைத் தேர்தல் உட்பட எதிர்காலத்தில் திமுகவோடு இணைந்து செயல்படுவது குறித்தும் பேசினோம்.
அதிமுக கூட்டணியில் 10 ஆண்டுகள் இருந்தோம். ஆனால், இன்று பாஜகவின் கிளை அமைப்பாக அதிமுக மாறிவிட்டது என்பது வேதனையாக இருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக சரிவைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக மேற்கு மண்டலத்தில் அதிமுக வலிமையை இழந்துள்ளது. அதிமுகவின் பாரம்பரிய வாக்குகளைக் கூட எடப்பாடி பழனிச்சாமியால் பாதுகாக்க முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
எடப்பாடி பழனிச்சாமி, கொங்கு வேளாளர் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் மேற்கு மாவட்டங்களில் பெரும்பான்மையாக இருக்கும் அந்தச் சமூகத்தினர் அவரை முழுமையாக ஆதரிப்பார்கள் என்கிற தோற்றம் இருந்தது.
அண்மையில் கே.ஏ.செங்கோட்டையன் நீக்கம் இப்போது தனியரசு எதிர்ப்பு ஆகியவற்றால் அங்கும் எடப்பாடி பழனிச்சாமி அணி பலமிழந்துவிட்டது.இதனால் மேற்கு மாவட்டங்களில் எடப்பாடி பழனிச்சாமி அணி சார்பாக தேர்தலில் போட்டியிடவே முன்னணியினர் தயங்குகின்றனர் என்று சொல்லப்படுகிறது.


