
மேற்குவங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 152 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23 ஆம் தேதியும், மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு ஏப்ரல் 29 ஆம் தேதியும் இரண்டுகட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
முதற்கட்டத் தேர்தலுக்கு இன்னும் சிலதினங்களே உள்ள நிலையில் பரப்புரை சூடு பிடித்துள்ளது.மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கைக்குப் பிறகு வௌியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி 90 இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
மேற்குவங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரசுக் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி ஆரம்பம் முதலே எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், புர்பா பர்தமான் மாவட்டம் கந்தகோஷ் என்ற இடத்தில் நேற்று நடந்த தேர்தல்பரப்புரைப் பேரணியில் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய மம்தாபானர்ஜி….
தேர்தலுக்கு முன்பாக பாஜக வாக்காளர்களுக்கு இலஞ்சம் கொடுக்கிறது.வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் தேர்தலில் வெற்றிபெற பாஜக பல சூழ்ச்சிகளைச் செய்கிறது.வாக்காளர்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். வாக்களிக்கும்போது வாக்குப்பதிவு இயந்திரங்களை சரியாகக் கண்காணிக்க வேண்டும்.எஸ்ஐஆர் நடவடிக்கை என்பது நாடு இதுவரை கண்டிராத மிகப்பெரிய முறைகேடு. நடப்பாண்டில் ஒன்றிய பாஜக அரசு கவிழும்.இது அனைவருக்கும் தெரியும் என்றார்.
அதன்பின், பாங்குரா மாவட்டம் ஓண்டாவில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி…
மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரசு ஆட்சியை அகற்ற ஆம்ஜனதாஉன்னயன் கட்சித் தலைவர் ஹூமாயூன் கபீருடன் வாக்குகளைப் பிரிப்பதற்காக ரூ.1,000 கோடி ரூபாய்க்கு பேரம் பேசியுள்ளது பாஜக. இதற்காக ஹூமாயூன் கபீருக்கு முன்பணமாக ரூ.200 கோடி கொடுத்துள்ளது. இதுதொடர்பாக கபீர் பேசும் வீடியோ வௌியாகி உள்ளது என குற்றம்சாட்டினார்.
முன்னதாக,
மேற்கு வங்கத்தில் முஸ்லிம் வாக்குகளைத் திசைதிருப்ப பாஜகவிடம் ஹுமாயூன் கபீர் ரூ.1,000 கோடி பேரம் பேசி,ரூ.200 கோடி முன்பணம் பெறுவது போன்ற காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.இதையடுத்து, ஹுமாயூன் கபீருடன் தனது கூட்டணியை முறித்துக் கொள்வதாக ஒவைசி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது ஏஐஎம்ஐஎம் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஹுமாயூன் கபீர் தொடர்பான இரகசியப் பதிவின் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன.இது,மேற்குவங்க
முஸ்லிம்களை அரசியல்ரீதியாகப் பாதிப்புக்குள்ளாக்குவதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.முஸ்லிம்
சமூகத்தின் கண்ணியம் மற்றும் நலன்களைக் கேள்விக்குள்ளாக்கும் எந்தவொரு கருத்துடனோ அல்லது
நடவடிக்கையுடனோ எங்களால் இணைத்துக்கொள்ள இயலாது.எனவே மேற்குவங்கத் தேர்தலில் தனித்துப்
போட்டியிடுவோம் என்று குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் பிர்ஹாத் ஹக்கீம் கூறுகையில்,
கபீர் முஸ்லிம்களை பாஜக-விடம் விற்றுவிட்டார்.மால்டா,முர்ஷிதாபாத் போன்ற மாவட்டங்களில் முஸ்லிம்
வாக்காளர்களைப் பிளவுபடுத்த பாஜக முயற்சிக்கிறது.இந்து,முஸ்லிம் மற்றும் மத்துவா சமூகங்களை
திசைதிருப்பும் நோக்கில்,பி,சி என 2 அணிகளை பாஜக உருவாக்கியுள்ளது.அந்த வீடியோவில் பிரதமர்
அலுவலகத்தின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில்,இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது ஏன் விசாரணை நடத்தப்படவில்லை.அமலாக்கத்துறை இவ்விசயத்தில் மவுனம் சாதிப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்த காணொலியில் பிரதமர் அலுவலகமும் சம்பந்தப்பட்டிருக்கிறது என்று தெரியவந்திருப்பதும் இவ்வாண்டில் மோடி அரசு கவிழும் என்று மம்தா பானர்ஜி பேசியிருப்பதும் ஒன்றிய அரசியலரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


