
மேற்கு வங்கத் தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டும் மே 21 ஆம் தேதி மறுதேர்தல் நடத்தப்பட உள்ளது. மீதமுள்ள 293 தொகுதிகளில் பாஜக 207 இடங்களைக் கைப்பற்றியது. மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரசுக்கு 80 தொகுதிகள் கிடைத்தன. காங்கிரஸ் 2, மார்க்சிஸ்ட் 1 இல் வெற்றி பெற்றன.
இதைத்தொடர்ந்து பாஜகட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக சுவேந்து அதிகாரி தேர்வு செய்யப்பட்டார். உடனடியாக அவர் ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.இதை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.
ஏற்கெனவே திட்டமிட்டபடி கொல்கத்தாவின் பிரிகேட் பரேடு மைதானத்தில் நேற்று காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது.
இதில் பிரதமர் மோடி முன்னிலையில் மேற்கு வங்கத்தின் புதிய முதலமைச்சராக காவியுடையில் சுவேந்து அதிகாரி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணமும் இரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.பாஜக மூத்ததலைவர்கள் திலீப் கோஷ்,அக்னிமித்ரா பால்,அசோக் கீர்தானியா,குதிராம் துடு,நிஷித் பிரமானிக் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
பதவியேற்பு விழாவில் ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா,ராஜ்நாத் சிங்,நிதின் கட்கரி,தர்மேந்திர பிரதான்,ராம் மோகன் நாயுடு மற்றும் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்,ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல்,ஒடிசா முதலமைச்சர் மோகன் மாஜி, பிகார் முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி,இராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா,அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா,அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு, நாகாலாந்து முதலமைச்சர் நெப்பியூ ரியோ, கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த், டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா,அரியாணா முதலமைச்சர் நயாப் சிங் சைனி, உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, மகாராஷ்டிர துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு சுவேந்து அதிகாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது….
இந்தநாள் நாட்டுக்கும்,மேற்கு வங்கத்துக்கும் மிகவும் முக்கியமான நாள்.சியாமா பிரசாத் முகர்ஜியின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு பாஜக செயல்படுகிறது.நான் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளேன். இப்போது நான் அனைவருக்கும் பொதுவானவன்.
மேற்கு வங்கம் சீர்குலைந்திருக்கிறது.கல்வி,கலாச்சாரம் சீர்குலைந்திருக்கிறது.மேற்கு வங்கத்தை மீண்டும் கட்டியெழுப்புவோம்.
இவ்வாறு முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தெரிவித்தார்.


