
முதல்வர் விஜய்க்கு நீண்ட காலமாக ஆஸ்தான ஜோதிடராக இருந்து வரும் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல், அக்கட்சியின் முக்கிய முடிவுகளில் திரைமறைவில் பங்காற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.தவெகவின் செய்தித் தொடர்பாளராக அறியப்பட்ட இவருக்கு,இப்போது நேரடியாகவே அரசுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணையில்,தமிழக முதல்வரின் அரசியல் விவகாரங்களைக் கவனிப்பதற்கான சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்படுகிறார்.அவர் பொறுப்பேற்கும் தேதியிலிருந்து இந்த நியமனம் அமலுக்கு வரும்.இதற்கான பணி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்துத் தனியாக அறிக்கை வெளியிடப்படும் எனல் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய் அரசின் இந்த முடிவுக்கு காங்கிரசு, விசிக, மார்க்சிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காங்கிரசு பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கூறியிருப்பதாவது…
பெரியாரை கொள்கைத் தலைவராகக் கொண்டுள்ள த.வெ.க.வின் அரசில் தனது ஜோதிடரை முதலமைச்சரின் சிறப்பு அதிகாரி பொறுப்பில் நியமித்துள்ளதை முதல்வர் ஜோசப் விஜய் மறுபரிசீலனை செய்யவேண்டும்.புதிய அரசு பொறுப்பேற்றவுடன் இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்குவதைத் தவிர்ப்பது நல்லது எனத் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியிருப்பதாவது…
புதிய அரசாங்கமே. இதுவல்ல இளைய தலைமுறையின் எதிர்பார்ப்பு.ஜோதிடம் தீர்மானிக்குமா நல்ல நிர்வாகத்தையும் வளர்ச்சியையும். அரசியலை அறிவியல் பூர்வமாக அணுகுங்கள்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


