
முதல்வர் விஜய்க்கு நீண்ட காலமாக ஆஸ்தான ஜோதிடராக இருந்து வரும் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல், அக்கட்சியின் முடிவுகளில் திரைமறைவில் முக்கியப் பங்காற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.தவெகவின் செய்தித் தொடர்பாளராக அறியப்பட்ட இவருக்கு,இப்போது நேரடியாகவே அரசுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணையில், தமிழக முதல்வரின் அரசியல் விவகாரங்களைக் கவனிப்பதற்கான சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்படுகிறார். அவர் பொறுப்பேற்கும் தேதியிலிருந்து இந்த நியமனம் அமலுக்கு வரும்.இதற்கான பணி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்துத் தனியாக அறிக்கை வெளியிடப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்குக் கடும் எதிர்ப்புகள் வந்திருக்கின்றன.
இதுகுறித்து,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டப்பேரவைக்குழு தலைவர் வன்னிஅரசு கூறியிருப்பதாவது…
ஆஸ்தான ஜோதிடர்கள் என்பவர்கள் மன்னர்களின் அரசவையில் ஆலோசனை கூறும் ராஜகுருக்களாக வலம்வந்தவர்கள்.ஆனால் இன்று மன்னர்களும் இல்லை,மன்னராட்சியும் இல்லை,அவர்களை ஆட்டிப்படைத்த வேதகுப்பைகளும் இல்லை.ஜனநாயக இந்தியாவின் தந்தையான புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்தளித்த அரசியலமைப்புச் சட்டத்தின் துணையோடு மக்களாட்சி நடைபெறுகிறது.
இன்றைய காலகட்டத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைத் தலைமையேற்று நடத்தும் முதலமைச்சருக்கு ஆலோசனை கூறும் அரசுப்பதவியில்,‘ஹார்ட் அட்டாக் வந்தால் பதற்றப்படாதீர்கள், மந்திரம் சொல்லுங்கள்’ ’தலைவிதி இருந்தால் தான் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்கும்’ என்று அறிவுரை சொல்லும் நபரை நியமிப்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
‘அறிவியலார்ந்த உளப்பாங்கு,மனிதநேயம்,ஆய்ந்து தெளிந்து சீர்திருத்தும் ஆர்வம் ஆகியவற்றை வளர்த்தல்’ ஒவ்வொரு குடிமகனின் கடமையாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுதி 51A (h) வரையறுக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் பரிந்துரைக்கும் கடமையை குடிமக்கள் மேற்கொள்வதற்கு ஊக்கப்படுத்த வேண்டியதுதான் அரசின் தலையாய பணி.’அறிவியல் மனப்பான்மையை’ (Scientific Temper) வளர்த்தெடுக்க வேண்டிய அரசு, முதல்வருக்கே ஆலோசனை சொல்லும் அரசுப்பதவியை அறிவியலுக்கு புறம்பான பிற்போக்குக் கருத்துகளைப் பரப்புவதையே ’தொழிலாக’ கொண்டிருப்பவருக்கு வழங்கினால்,அது மக்களுக்குச் சொல்லும் செய்தி என்னவாக இருக்கும்?
மக்களை இருளில் தள்ளும் பிற்போக்கு,மூடநம்பிக்கைகளுக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைமுறையில் உள்ள மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை விரிவாக ஆராய்ந்து தமிழ்நாட்டிலும் அத்தகைய சட்டத்தைக் கொண்டு வருவதுதான் மதச்சார்பற்ற அரசின் பணியாக இருக்கவேண்டும்.அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமான அறிவியலுக்கு புறம்பான இந்த நியமனத்தை தமிழ்நாடு அரசு உடனே திரும்பப்பெற வேண்டும்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


