
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த ஆகஸ்ட் 31 இல், செப்டம்பர் 5 ஆம் தேதி மனம் திறக்கப் போவதாகக் கூறியிருந்தார். அதன்படி, கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் செப்டம்பர் 5 இல் அளித்த பேட்டியில் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்றும், இதற்காக 10 நாட்கள் கெடு விதிப்பதாகவும் கூறினார். ஆனால் பெரிய அளவில் கருத்துகளைக் கூறவில்லை.
இந்நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள செங்கோட்டையன் முதன்முறையாக நேற்று கோபியில் அளித்த பேட்டியில் உண்மையிலேயே மனம் திறந்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது….
நான் முதலமைச்சராக ஆனதற்குப் பிறகுதான் செங்கோட்டையனுக்கு அமைச்சரவையில் இடம் தந்தேன் என்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. எங்களைப் போன்றவர்கள் இவரை முன் மொழியவில்லை என்றால் இவர் முதலமைச்சராகவே ஆகியிருக்க முடியாது. ஜெயலலிதா மூலமாக மூன்று முறை முதலமைச்சரானவர் ஓபிஎஸ். ஆனால் இவரைப் பொறுத்தவரை கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சர் பதவியில் வந்து அமர்ந்தார். இது, நாடறிந்த ஒன்று. இன்று என்னைக் கொச்சைப்படுத்த வேண்டும் என்பதற்காக, நான்தான் செங்கோட்டையனுக்கு அமைச்சரவையில் இடம் தந்தேன் என்கிறார். இது, வேதனை அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது.
முதலில், இவர் முதலமைச்சர் ஆவதற்கு வழிவகை செய்தவர் அன்றைய பொதுச்செயலாளர் சசிகலா. அவரைப் பற்றி கொச்சையாகப் பேசினார், எடப்பாடி பழனிச்சாமி. வளர்த்த கடா மார்பில் பாய்வதைப்போல் பேசக்கூடாது என்றோம். அதற்குப் பிறகு ஆட்சி நடத்த முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தபோது, தர்ம யுத்தத்தை நடத்திக்கொண்டிருந்த ஓபிஎஸ்.சை அழைத்து வந்து நீங்கள் 11 பேரும் எங்களுக்கு ஆதரவு தாருங்கள், நீங்கள் ஒருங்கிணைப்பாளர், நான் இணை ஒருங்கிணைப்பாளர், நான் முதலமைச்சர், நீங்கள் துணை முதலமைச்சர் என்று சொல்லி அவரையும் அந்த நிலைக்குக் கொண்டுசென்று, காலம் கடந்த பிறகு அவரையும் வெளியேற்றினார்.
அதற்குப் பிறகு, இந்த அளவிற்கு நான்கு ஆண்டு காலம் ஆட்சிக்கட்டில் அமர வைத்து நம்மைப் பாதுகாத்த பாஜக, 2024 இல் என்ன செய்யப்போகிறது என்று பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியே வந்தார். இனிமேல் பாஜகவுடன் கூட்டணி இல்லை, இன்று மட்டுமல்ல, 2026, 2029 மற்றும் 2031 ஆம் ஆண்டுகளிலும் கூட்டணி இல்லை என்று சொன்னார். ஆனாலும் மீண்டும் அங்கேயே போய்ச் சேர்ந்தார் என்ற செங்கோட்டையனிடம்,
உங்களை பாஜக இயக்குவதாக அதிமுகவைச் சேர்ந்தவர்களே குற்றம்சாட்டுகின்றனரே? என்று கேட்டதற்கு,
என்னைப் பொறுத்தவரையில், நாங்கள் ஆறு பேர் சென்றோம், அதிமுக இணைக்கப்பட வேண்டும் என்று சொன்னோம், வெளியே சென்றவர்களை மீண்டும் கழகத்தில் இணைக்க வேண்டும் என்று சொல்லியபோது அங்கு என்ன நடைபெற்றது என்று நான் வெளியே சொல்ல விரும்பவில்லை. அந்த அளவிற்கு கேவலமான சொற்கள் அங்கே இருந்ததை நாடறியும். என்னைப் பொறுத்தவரை என்னை அழைத்தவர்கள் பிஜேபி தலைவர்கள்தான், அழைத்து இரு இயக்கங்களையும் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று கூறியதும் அவர்கள் தான். நானும் அதையேதான் சொல்கிறேன். இயக்கம் ஒன்றிணைக்கப்பட வேண்டும். உங்களை விட்டால் எங்களுக்கு வேறு வழி இல்லை. எங்களை விட்டால் உங்களுக்கும் மாற்று இல்லை. ஆகவே இந்த முறை எங்களை தமிழ்நாட்டில் அரியணையில் அமர வைக்கத் தயாராக இருக்கவேண்டும். 2029 ஒல் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய, மேலே இருக்கின்ற உயர்மட்டத்தைச் சேர்ந்தவர்களை கலந்துபேசி முடிவு செய்யலாம் என்று சொன்னேனே தவிர, என்னை வைத்துக்கொண்டு பிரிவினையை நாடுவதற்கு என்றைக்கும் அந்த வார்த்தையை சொல்லவில்லை என்று செங்கோட்டையன் பதில் அளித்தார்.
டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கி நடத்தி வருகிறார். நீங்கள் தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவை கொண்டு போகிறீர்களா அல்லது தனிக்கட்சி தொடங்க போகிறீர்களா? என்ற கேள்விக்கு, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்’ என்று செங்கோட்டையன் பதில் அளித்தார்.
எடப்பாடியை தவிர வேறு யாரை வேண்டுமானாலும் முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்கிறேன் என்று டிடிவி தினகரன் சொல்லி இருக்கிறாரே? என்று கேட்டதற்கு, ‘அவர் சொல்வதற்கு எல்லாம் நான் கருத்து கூற முடியாது. என்னுடைய கருத்தை மட்டும் கேளுங்கள். எல்லோரும் ஒருங்கிணைய வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். டிஸ்கஸ் பண்ணலாம். பிரிந்தவர்கள் ஒன்று கூடுவதில்லையா? ஒரு வீட்டில் சண்டை போட்டு அடிதடி நடந்தால் பிறகு ஒன்று சேர்வது இல்லையா? இது ஒவ்வொருவருடைய கருத்துக்கள். அந்த கருத்துக்களுக்கு எல்லாம் என்னிடம் விளக்கம் கேட்க கூடாது’ என்று செங்கோட்டையன் பதில் அளித்தார்.
இப்போது எதற்கெல்லாமோ சிபிஐ விசாரணை தேவை என்று வலியுறுத்திக்கொண்டிருக்கிற எடப்பாடி பழனிச்சாமி, கொடநாட்டில் நடைபெற்ற கொலை-கொள்ளை பற்றி இதுவரை குரல் கொடுத்தாரா? எதற்கெடுத்தாலும் சிபிஐ விசாரணை கேட்ட அவர், இதற்கு சிபிஐ விசாரணை கேட்டாரா? அங்கு வாழ்ந்துகொண்டிருந்த ஜெயலலிதாவுடைய கொடநாட்டில் ஏற்பட்டு இருக்கின்ற கொலை, கொள்ளைக்கு ஒரு நாளாவது சிபிஐ விசாரணை வேண்டுமென்று குரல் கொடுத்தாரா? என்னைப் பொறுத்தவரை யார் குற்றவாளி என்பதை இந்த நாடு தெரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான்’ என்று செங்கோட்டையன் கூறினார். ‘அங்கு ஆவணங்கள் இருந்ததா?’ என்று கேட்டதற்கு, ‘நான் அந்த கருத்துகளுக்கு உள்ளே போகமாட்டேன். நீங்கள் ஆவணங்களைக் கேட்பீர்கள். நகை இருந்ததா அல்லது வேறு ஏதாவது இருந்ததா என கேட்பீர்கள். இதற்கு எல்லாம் நான் பதில் கூற முடியாது. என்னைப் பொறுத்த வரை எனக்கு எதிரான கருத்திற்கு மட்டும்தான் நான் பதில் சொல்ல முடியும். ஜனநாயக ரீதியாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துகளை சொல்வதற்கு எல்லாம் நான் பதில் கூற முடியாது’ என்றார்.
இன்றைக்கு இவர் ஆட்சி நடத்தவில்லை, இவர் கட்சி நடத்துவதை காட்டிலும் இவரது மகன், மாப்பிள்ளை, மருமகன், அக்கா மகன்தான் பல்வேறு கருத்துகளைச் சொல்லியும், காலில் விழுவது, நாளைக்கு பதவியை எடுத்து விடுவேன் என்று சொன்னால் நேசிப்பது என உங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை. நான் சொல்வதற்கு இந்த நிலைதான் நீடித்துக்கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்திற்காக தியாகம் செய்தவர்கள், இந்த இயக்கமே உயிர் என்று நேசித்தவர்கள், சாதாரணமாக இந்த இயக்கத்தைப் பற்றித் தெரியாதவர்களிடம் சென்று மண்டியிட வேண்டிய காலம் இன்று உருவாகிக்கொண்டிருக்கிறது. வாரிசு அரசியல் செய்கிறார் என்று முன்பே கூறியிருந்தால் அப்போதே என்னை நீக்கியிருப்பார்கள் என்றார்.
ஒருவர் தன்னைச் சுற்றி இருக்கின்றவர்களை பலவீனப்படுத்தும்போது அதன் மூலமாக அவர்களே பலவீனம் அடைகிறார்கள் என்பதுதான் வரலாறு. அது மட்டுமில்லை, நாமக்கலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரிய கட்சி கொடி பறக்கிறது, பிள்ளையார் சுழி போட்டாகி விட்டது என்று சொன்னதற்கு பிறகு நேற்று முன்தினம் என்ன நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். நம்முடைய பலம் என்ன, நாம் ஒருங்கிணைந்து ஒற்றுமை உணர்வோடு இருக்கிறபோது நம்மை நாடி வருவார்கள். மற்றவர்களை நாடிச்செல்ல தேவையில்லை என்பதுதான் வரலாறு. எம்ஜிஆர் ஆக இருந்தாலும் சரி, ஜெயலலிதாவாக இருந்தாலும் சரி, இந்த வரலாற்றைதான் படைத்தார்கள்.
இதை, எடப்பாடி பழனிச்சாமி மறந்து விடக்கூடாது. ஒருவர் முன்னேற வேண்டும் என்றால், தனது சொந்த கால்களில் நடந்து செல்ல வேண்டுமே தவிர, பிறர் முதுகில் ஏறி சவாரி செய்யக்கூடாது. பிறர் முதுகில் ஏறிச்சென்று சவாரி செய்யலாம் என்று கனவு கண்டால் இது போன்ற நிலைதான் ஏற்படும். இன்றும் என்னுடைய ஆதரவாளர்கள் 14 பேரை நீக்கி இருக்கிறார்கள். இன்றும் 500, 1000 பேர் வந்து இருக்கிறார்கள். அவர்கள் பெயர்களை போட்டால் அவர்களது பெயர்களும் நாளை நீக்கம் பட்டியலில் வந்துவிடும். இப்படியே நீக்கிக்கொண்டிருந்தால் என்ன நிலை ஏற்படும்? இப்படியே நீக்கிக் கொண்டிருந்தால், முழு நிலவு தேய்ந்து அமாவாசை ஆகிவிடும்அமாவாசை ஆகிவிடும்.
இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.


