தெம்பாக வலம்வரும் ஓபிஎஸ் – எடப்பாடி அதிர்ச்சி

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் என்ன செய்யப் போகிறார்? என்பது இன்று அரசியலரங்கில் உள்ள பெரிய கேள்வி.

அதிமுக கூட்டணிக்குள் அவரைக் கொண்டுவர ஒரு சமரசத் திட்டத்தை பாஜக முன்வைத்துள்ளது.2021 தேர்தலில் தென் மாவட்டத்தின் 55 தொகுதிகளில் 18 தொகுதிகளில் மட்டுமே அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. அப்போது டிடிவி.தினகரன் கட்சியால் இந்தத் தோல்வி என்று நம்புகிறார்கள்.

அதுபோல் ஓபிஎஸ் வெளியே இருந்தால் வாக்குகள் பிரியும்.அது தோல்விக்கே வழிவகுக்கும் என்பதால் அவரை கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக முயல்கிறது.

திமுக தரப்பும் ஓபிஎஸ் இந்தப் பக்கம் வந்தால் வரட்டும் என பச்சைக்கொடி காட்டியிருக்கிறதாம்.ஏற்கெனவே,
வைத்திலிங்கத்தை கட்சியில் சேர்த்ததனால் காவிரிப்படுகை மாவட்டங்களில் கூடுதல் பலம் கிடைத்திருக்கிறது. ஓபிஎஸ் வந்தால் தென் மாவட்டங்களில் அவரால் கூடுதல் பலம் கிடைக்கலாம் என்பது திமுகவின் கணக்கு.

விஜய் கட்சியும் ஓபிஎஸ் தங்கள் பக்கம் வந்தால் நல்லது என நினைக்கிறதாம்.அவர் வந்தால்,மேற்கு மண்டலத்தை செங்கோட்டையனிடம் ஒப்படைத்தது போல் தென் மண்டலத்தை ஓபிஎஸ் வசம் ஒப்படைத்துவிடலாம் என நினைக்கிறாராம் விஜய்.

இப்படி மூன்று தரப்பினரும் எதிர்பார்க்கும் இடத்தில் இருக்கிறோம் என்பதை அறிந்து மிகத் தெம்பாக வலம் வந்து கொண்டிருக்கிறாராம்.

அவர், டிடிவி.தினகரன் அவருடைய அண்ணன் எடப்பாடியிடம் பேசவேண்டும் என்று கிண்டல் செய்ததற்கும், பொதுக்குழுவால் நீக்கப்பட்டவர் ஓபிஎஸ் என்று எடப்பாடி சொன்னது பழைய செய்தி என்று இடதுகையால் தள்ளிவிட்டதற்கும் இதுதான் காரணம் என்கிறார்கள்.

ஓபிஎஸ் உடனிருந்த எல்லோரும் விலகிப் போய்விட்டார்கள்,அதனால் அவருக்கு எந்த மரியாதையும் இருக்காது செல்லாக்காசாகிவிடுவார் என்று சொல்லிக் கொண்டிருந்த எடப்பாடி பழனிச்சாமி,எல்லாத் தரப்பும் அவரை விட்டுவிடக்கூடாது என்று நினைப்பதைப் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறாராம்.

இதனால்,விரைவில் எடப்பாடி பழனிச்சாமியின் விருப்பமின்மையையும் மீறி, அதிமுக பாஜக கூட்டணிக்குள் ஏதாவதொரு வடிவத்தில் ஓபிஎஸ் சேர்த்துக் கொள்ளப்படுவார் என்பதே இற்றைத் தகவலாக அரசியலரங்கில் உலா வந்து கொண்டிருக்கும் செய்தி.

Leave a Response