மீண்டும் இணையும் ஓபிஎஸ் எடப்பாடி – சமரசத்திட்டம் இதுதான்?

அதிமுக பாஜக கூட்டணியைப் பலப்படுத்தும் பணிகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள். அதில் முதன்மைப் பணியாக அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது.

பிரிந்து சென்றவர்கள் அல்ல கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்த எடப்பாடி பழனிச்சாமி, டெல்லி கொடுத்த அழுத்தம் காரணமாக டிடிவி.தினகரனை கூட்டணியில் சேர்க்கச் சம்மதம் சொன்னார்.

பிரதமர் மோடி கலந்து கொண்ட பொதுக்கூட்ட மேடையில் இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர்.

அவருக்கு அடுத்தபடியாக ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்துவரும் முயற்சியில் பாஜக இறங்கியிருக்கிறது.

டிடிவி.தினகரன் தனிக்கட்சி வைத்திருப்பதால் கூட்டணியில் ஒரு கட்சியாக அவரைச் சேர்த்துக் கொண்டார்கள்.அதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு சிக்கலுமில்லை.ஆனால், ஓபிஎஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான்தான் என உரிமை கொண்டாடிக் கொண்டிருப்பவர்.அதற்காக வழக்குகள் போட்டிருக்கக் கூடியவர்.அவரை எப்படிச் சேர்க்க முடியும்? அவரைச் சேர்த்தால் எனக்குப் போட்டியாகத்தானே வருவார்? அதை எப்படி நான் ஒப்புக்கொள்வது? என்று எடப்பாடி கேட்டிருக்கிறார்.

இதனால், பாஜக தரப்பிலிருந்து ஒரு சமரசத் திட்டம் முன்வைக்கப்பட்டிருக்கிறதாம்.

அது என்ன?

ஓபிஎஸ், இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு என அறிவித்து பரப்புரையிலும் ஈடுபடுவார்.ஆனால், அவர் தேர்தலில் போட்டியிடமாட்டார்.அவர் சொல்லும் சிலருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்க வேண்டும். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் அண்டை மாநிலங்கள் ஏதாவதொன்றில் அவர் ஆளுநராக நியமிக்கப்படுவார்.

அதேநேரம், அவருடைய மகன் ஓபிஎஸ் இரவீந்திரநாத்துக்கு பாராளுமன்றத் தேர்தலில் கேட்கிற தொகுதியைக் கொடுத்துவிட வேண்டும்.

இதுதான் பாஜக முன்வைத்திருக்கும் சமரசத் திட்டம்.

இதை ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்கட்டமாக அன்பாக அறிவுறுத்தப்பட்டிருக்கிறதாம்.தன் அணியினருடன் கலந்துபேசி முடிவு சொல்வதாக அவர் சொல்லியிருக்கிறாராம்.

அதேபோல், இந்தத் திட்டம் குறித்து தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுப்பதாக ஓபிஎஸ் சொல்லியிருக்கிறாராம்.

ஓபிஎஸ், எடப்பாடி ஆகிய இருவருக்கும் இந்தத் திட்டத்தை ஏற்பதைத் தவிர வேறுவழியில்லை என்று தெரிந்தாலும் பாஜகவுக்கு வலிக்காதவாறு கொஞ்சம் தாமதப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

அரசியல் வட்டாரங்களின் உயர்மட்டத்தில் உலாவந்து கொண்டிருக்கும் இந்தத் தகவல் விரைவில் அம்பலத்துக்கு வருமென்று சொல்கிறார்கள்.

பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Response