
தமிழ்நாட்டில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அரசியல் கட்சிகளின் அணிச்சேர்க்கை தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன.
தமிழ்நாட்டில் இருபெரும் கூட்டணிகளான திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி ஆகிய இரு அணிகளுடனும் சில கட்சிகள் கூட்டணி பேரம் பேசிவருகின்றன.அவற்றில்,பிரேமலதாவின் தேமுதிகவும் ஒன்று.
பிரேமலதா, கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட கணிசமான தொகுதிகள் மற்றும் செலவுக்கான தொகை ஆகியனவற்றை திமுக கூட்டணியில் கேட்டிருக்கிறார்.
அதிமுக கூட்டணியில் சேருவதற்கு, தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் தாண்டி ஏற்கெனவே ஒப்புக்கொண்ட மாதிரி மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.அதோடு நில்லாமல், ஒன்றியத்தில் பாஜக ஆட்சி நடந்து வருவதால்,தங்கள் கட்சி சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகப் பொறுப்பேற்பவருக்கு ஒன்றிய அமைச்சர் பதவி கொடுக்கவேண்டும் என்றும் கேட்டிருக்கிறார்.
திமுக கூட்டணியில் கேட்ட தொகுதிகள் மற்றும் தொகையின் அளவு அதிகம் என்பதால் அக்கூட்டணியில் சேர்க்கவியலாது என்று கைவிரித்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
அதிமுக கூட்டணியிலும்,பிரேமலதா கேட்டதைவிட குறைவான தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு தருகிறோம், மாநிலங்களவை உறுப்பினர் கேட்கக்கூடாது என்று கறாராகச் சொல்லிவிட்டார்களாம்.
இதனால், ஏற்கெனவே கேட்டதிலிருந்து பல படிகள் இறங்கிவந்தால் மட்டுமே கூட்டணி அமையும் என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது.
உடனடியாக இறங்கி வந்தால் மிகவும் பலவீனமாகிவிடும் என்பதால் இரண்டு தரப்பிலும் பிடிகொடுக்காமல் பேசிக்கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
இதனால், இரு கூட்டணிகளும் அவரைக் கழற்றி விட்டுவிடலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
அப்படி நடக்கும் பட்சத்தில் இந்தத் தேர்தலோடு அக்கட்சி காணாமல் போய்விடும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
என்ன நடக்கப் போகிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம்.


