அதிமுக கூட்டணியில் தேமுதிக இருக்கிறதா? இல்லையா? – அக்கட்சி வட்டார தகவல்

மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக அணியில் தேமுதிகவுக்கு ஓரிடம் வேண்டும் என்று அக்கட்சி வலியுறுத்தி வந்தது.ஆனால்,தேமுதிகவுக்கு அடுத்த ஆண்டு இடம் தரப்படும் என்று அதிமுக அறிவித்துவிட்டது.

இந்நிலையில், இதுகுறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது….

திமுக பொதுக்குழுவில் எங்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த்துக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு திமுகவுக்கும் நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம்.

தேமுதிகவுக்கு 2026 இல் மாநிலங்களவை இடம் கொடுக்கப்படும் என அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலின் போதே அதிமுக கூட்டணியில் 5 இடங்கள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் என்பது உறுதி செய்யப்பட்டது.இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மூத்த நிர்வாகிகள் வாய்மொழியாக மட்டுமின்றி எழுத்துப்பூர்வமாகவும் உறுதி அளித்தனர். அதை அறிவிக்க வேண்டிய இடத்தில் அதிமுக இருப்பதால்தான் நாங்கள் அமைதியாக இருந்தோம். ஏனெனில், 2024 மக்களவைத் தேர்தலின் போதே எழுதித் தரப்பட்ட ஒப்பந்தத்தில் வருடம் இல்லை. அதுதொடர்பாக கேட்டதற்கு வழக்கமாக வருடம் குறிப்பிடமாட்டோம். ஆனால், உறுதியாக ஓரிடம் தருகிறோம் என்றனர்.

ஏற்கெனவே அன்புமணி, ஜி.கே.வாசனுக்கு அதிமுக தரப்பில் மாநிலங்களவை இடம் தரப்பட்டுள்ளது.அதேபோல், இந்த முறை தேமுதிகவுக்கு என்று உறுதி செய்துள்ளனர். அரசியல் என்பது தேர்தலை ஒட்டியதுதான். 2026 தேர்தலை ஓட்டித்தான் மாநிலங்களவை இடம் அறிவிக்கப்பட்டுள்ளது.அவர்களின் கடமையை ஆற்றியுள்ளனர். தேர்தலை ஒட்டியே எங்களின் கடமையைச் செய்வோம். ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில்கூட்டணி குறித்த நிலைபாட்டை முடிவு செய்வோம். அடுத்த 6 மாதம் தேர்தலை நோக்கி எங்கள் பயணம் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடருகிறது என அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் பிரேமலதா அதை உறுதிப்படுத்தவில்லை என்பதோடு திமுக பொதுக்குழு தீர்மானத்துக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்.

இதனால் அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடருகிறதா? என்கிற ஐயம் அரசியல் வட்டாரத்தில் எழுந்திருக்கிறது.

2026 தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுக,அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளோடும் பேச்சுவார்த்தை நடத்துவது, எங்கு அதிகப் பலன் கிடைக்கிறதோ? அங்கு சேர்ந்து கொள்ளலாம் என்று அவர் முடிவு செய்திருப்பதாகவும் தேமுதிக கட்சி வட்டாரங்களில் பேச்சு.

Leave a Response