
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகக் கடுமையாகப் பேசிக் கொண்டிருந்த டிடிவி.தினகரன்,திடீரென அவர் தலைமையிலான கூட்டணியில் இணைந்தார்.கூட்டணியில் டிடிவி.தினகரன் இணைந்ததையடுத்து டிடிவிக்கு, எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்தார். பதிலுக்கு டிடிவியும் நன்றி கூறினார். தேவைப்படும்போது எடப்பாடியை சந்திப்பேன் என்றும் தெரிவித்தார்.
ஆனாலும் அதிமுக மற்றும் அமமுகவைச் சேர்ந்த பெரும்பாலான நிர்வாகிகளுக்கு இந்தக் கூட்டணியில் விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தாமரை இலை தண்ணீர் போல் அவர்கள் உள்ளனராம்.
இந்நிலையில்,எடப்பாடி பழனிச்சாமியிடம் இருந்து தென்மாவட்ட மற்றும் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகளுக்கு ஒரு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.
அதில்,நம் கூட்டணியில் இணைந்துள்ள அமமுக நிர்வாகிகளுடன் யாரும் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது. குறிப்பாக டிடிவி.தினகரனுடன் முன்னாள் அமைச்சர்கள் பேசக்கூடாது. அதையும் மீறி தொடர்பில் இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எடப்பாடி எச்சரித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
தினகரன் அதிமுகவில் இருந்த போது, முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் அனைவரும் அவரோடு நெருக்கமாக இருந்தார்கள்.அந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி தினகரன் யாரையும், தன் பக்கம் இழுத்து அதிமுகவைக் கைப்பற்றத் திட்டமிடுவார்.அதைத் தடுக்கவே எடப்பாடி இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
உத்தரவிட்டதோடு நின்று விடாமல், அதைக் கண்காணிக்க இரகசிய குழு ஒன்றையும் எடப்பாடி உருவாக்கியுள்ளாராம்.அந்தக் குழு, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளைத் தீவிரமாக கண்காணித்து வருகிறதாம். இதனால் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் குழப்பத்தில் உள்ளனர்.
கூட்டணியில் டிடிவி.தினகரன் இணைந்தவுடன் கூட்டணி வலிமையாகிவிட்டது என்று வெளிப்படையாகச் சொல்லி அவருக்கு வாழ்த்தும் வரவேற்பும் தெரிவித்துவிட்டு மறைமுகமாக அவருக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி செயல்படுவதால் இரண்டு தரப்பினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இப்படி இருந்தால் எப்படிச் செயல்படுவது? என்று வருத்தப்பட்டுக் கொண்டும் இருக்கிறார்களாம்.


