கட்சியின் சின்னத்திலும் தமிழ் இல்லை – தவெக மீது விமர்சனம்

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு ஊதல் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.அக் கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கடந்த நவம்பர் மாதமே டெல்லியில் முகாமிட்டு, தேர்தல் ஆணையத்திடம் 10 விருப்பச் சின்னங்களைப் பட்டியலிட்டு வழங்கியிருந்தனர்.

தற்போது, தவெகவுக்கு ஊதல் (Whistle) சின்னத்தை பொதுச் சின்னமாக ஒதுக்கி இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.

அங்கீகரிக்கப்படாத புதிய கட்சிகளுக்கு ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி சின்னங்கள் ஒதுக்கப்படுவதே வழக்கம். ஆனால்,தவெகவுக்கு தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கும் ஊதல் சின்னமே பொதுச் சின்னமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

அக்கட்சியின் தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது சமூகவலைதளப் பக்கத்தில்,

தவெகவுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை வழங்கியுள்ளது. நாம் வாகை சூடப்போகும், வரலாறு திரும்பப்போகும் 2026 தமிழக தேர்தல் அரசியல் களத்தில் புதிய சகாப்தம் படைக்கப்போகிறது நம் தலைவர், முதல்வர் வேட்பாளர் விஜய்யின் வெற்றிச் சின்னமான விசில்.தவெக தோழர்கள் சமூக வலைத்தளங்கள் தொடங்கி சுவர் விளம்பரங்கள் வரை நம் வெற்றிச் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இந்தப் பணிகளில்தேர்தல் ஆணையம் நமக்கு ஒதுக்கியுள்ள அதிகாரப்பூர்வ விசில் சின்னத்தின் அதே வடிவத்தை மட்டும் நம் கழகத் தோழர்கள் அனைவரும் ஒன்று போல் பயன்படுத்தவும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். மாற்றத்துக்கான விசில் சத்தம் மாநிலம் முழுவதும் ஒலிக்கட்டும். அந்த ஒலியில் மக்களுக்கான நம் புதிய அரசு பிறக்கட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில்…

ஒட்டுமொத்த தமிழகமக்களின் ஒரே சின்னம் விசில். வெற்றிச்சின்னம் விசில். வருகிற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம். விசில் போடுவோம் எனத் தெரிவித்துள்ளார்

கட்சியின் பெயரில் தமிழகம் என்று வைத்துக்கொண்டு தமிழை நேசிப்பதாக வெளியில் சொன்னாலும், கட்சிச் சின்னத்தின் பெயரைக் கூட தமிழில் சொல்லாமல் ஆங்கிலத்திலேயே அனைவரும் சொல்கின்றனர்.இது பிறமொழி என்ற புரிதல் கூட அவர்களுக்கு இல்லை.இவ்வளவுதான் அவர்கள்.ஏற்கெனவே அக்கட்சி தமிழல்லாத பிறமொழியினரின் ஆதிக்கத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டில் தமிழின் நிலை இதுதான் என்பதற்கு இது ஓர் சிறந்த எடுத்துக்காட்டு என தமிழார்வலர்கள் வருந்திக் கூறுகின்றனர்.

Leave a Response