சரியான நேரத்துக்கு விசாரணைக்கு செல்லும் விஜய் – ஆதரவாளர்கள் வருத்தம்

கரூரில் நடிகர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர். நிர்மல்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் சுமார் 20 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. கரூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது.

இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜய்க்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டது. அதனால்,சனவரி 12 ஆம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ தலைமைஅலுவலகத்தில் ஆஜரான விஜய்யிடம் அதிகாரிகள் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது, 100-க்கும் மேற்பட்ட கேள்விகளை அதிகாரிகள் எழுப்பினர். அவர் அளித்த பதில்களை எழுத்துப் பூர்வமாகவும், காணொலியாகவும் அதிகாரிகள் பதிவு செய்துகொண்டனர்.

அடுத்தநாளும் விசாரணையைத் தொடர வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.அப்போது பொங்கல் விடுமுறை வேண்டும் என்கிற விஜய்யின் வேண்டுகோளை ஏற்று, பொங்கல்பண்டிகை முடிந்து மீண்டும் விசாரணைக்கு வருமாறு அதிகாரிகள் கூறினர்.

அதைத் தொடர்ந்து,இன்று (சனவரி19 ஆம் தேதி) மீண்டும் விசாரணைக்கு வருமாறு விஜய்க்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியது.

அதை ஏற்று, நேற்று மாலை 4 மணிக்கு தனி விமானம் மூலம் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார். சிபிஐ அலுவலகத்தில் அவர் இன்று காலை ஆஜராகிறார்.

செல்வது தனிவிமானம் என்றாலும் அதில் தாமதம் எதுவும் ஏற்பட்டுவிட்டால் மேற்கொண்டு சிக்கல் வரும்.எனவே, இன்று காலை நடக்கவிருக்கும் விசாரணைக்கு நேற்று மாலையே புறப்பட்டுச் சென்றார்.

அந்தக் கொடிய நிகழ்வு நடந்த செப்டம்பர் 27 ஆம் தேதியும் இதேபோல் சீக்கிரமாகப் புறப்பட்டிருந்தால் இப்படி சென்னைக்கும் டெல்லிக்கும் அலைய வேண்டியிருந்திருக்காது என்று அவருடைய ஆதரவாளர்கள் வருந்திச் சொல்கின்றனர்.

Leave a Response